No products in the cart.
நவம்பர் 10 – போக்கையும் வரத்தையும்!
“கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றைக்குங் காப்பார்” (சங். 121:8).
வாழ்க்கை என்பதே, போக்கும் வரத்தும்தான். காலையிலே வேலைக்குப் போகிறோம். மாலையில் வீடு திரும்புகிறோம். நண்பர்கள், உறவினர் குடும்பங்களிலுள்ள விழாக்களுக்குச் செல்லுகிறோம். திரும்பி வருகிறோம். பல ஊர்களுக்கு செல்லுகிறோம்; திரும்பி வருகிறோம். ஆம்! நம்முடைய வாழ்க்கை முழுவதிலும் நாம் போக்கும் வரத்துமாய்தான் இருக்கிறோம்.
இந்த நவீன காலத்திலே வாகன விபத்துகள் ஏராளமாய் பெருகியிருக்கும்போது வீட்டைவிட்டு புறப்படுகிறவர்கள் திரும்பி வருவார்களா என்பதே சந்தேகத்துக்குரியதாய் இருக்கிறது. வழி நெடுக விபத்துக்குள்ளாகி, நொறுங்கிப்போன பல வாகனங்களைப் பார்க்கிறோம்.
சமீபத்தில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட ஒருசில நிமிடங்களுக்குள், தாழப்பறந்து குடியிருப்புப்பகுதிக்குள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த ஒருவர் தவிர, மற்றப் பயணிகளும், பணியாளர்களும், விமானிகளும் மரித்துப்போனார்கள். அவர்கள் வீட்டைவிட்டுப் புறப்படும்போது அதுதான் தங்களுடைய வாழ்க்கையின் இறுதிப் பிரயாணம் என்று எண்ணியிருக்கமாட்டார்கள்.
ஆனால், கர்த்தருடைய பாதுகாப்புக்காக நாம் ஊக்கமாய் ஜெபிக்கும்போது, கர்த்தர் வாக்குத்தத்தமாக சொல்லுகிறார், உன் போக்கையும், உன் வரத்தையும் என்றென்றைக்கும் காப்பேன். காப்பதுமட்டுமல்ல, நம்மை ஆசீர்வதிக்கவும் அவர் சித்தங்கொண்டிருக்கிறார்.
“நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்” (உபா. 28:6). “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:6) என்று வேதம் சொல்லுகிறது.
நீங்கள் எங்கு போனாலும் ஜெபம்பண்ணிவிட்டுப் புறப்படுங்கள். தேவசமுகம் முன் செல்ல ஒப்புக்கொடுத்துச்செல்லுங்கள். அப்பொழுது உங்கள் வழிகளிலெல்லாம் உங்களைக் காக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். கர்த்தருடைய சமுகமும் பிரசன்னமும் உங்களோடிருக்கும்.
தாவீதின் போக்கையும் வரத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்ததினாலே பெலிஸ்தியரின் இராஜாவாகிய ஆகீஸ் என்பவர் தாவீதை அழைத்து, “நீ உத்தமன் என்றும், நீ பாளயத்திலே என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்று சாட்சி கொடுத்தார் (1 சாமு. 29:6).
கர்த்தர் உங்களோடு இருப்பாரானால், உங்கள் போக்கும் வரத்தும் ஆசீர்வாதமானதாயிருக்கும். நீங்கள் ஒரு இடத்துக்குச் செல்லும்போது, தேவசமுகமும் பிரசன்னமும் உங்களோடுகூட வரும். சேனைகளின் கர்த்தர் உங்களோடு வருவார். ஆயிரம் பதினாயிரம் தேவ தூதர்கள் உங்களோடு வருவார்கள். நீங்கள் செல்லும் காரியம் வாய்க்கும். நீங்கள் செல்லும் இடங்களில் தேவநாமம் மகிமைப்படும். தேவபிள்ளைகளே, கர்த்தர் நிச்சயமாகவே உங்கள் போக்கையும் வரத்தையும் என்றென்றைக்கும் ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங். 18:29).