No products in the cart.
டிசம்பர் 06 – வானத்தை நோக்கிப் பார்!
“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங். 19:1).
இன்று உலகத்தார் வானத்தை நோக்கிப்பார்க்கிறார்கள்; அதே நேரத்தில் பரிசுத்தவான்களும் நோக்கிப்பார்க்கிறார்கள். நோக்கிப்பார்த்தல் ஒன்றுதான். ஆனால், எதிர்பார்ப்புதான் வித்தியாசமானது!
மனிதன் நட்சத்திரங்களை நோக்கிப்பார்த்து, அதிலே ராசிபலன் இருக்கிறது எனத் தவறாக நம்பி, தனக்கு நல்லது வருமோ, கெட்டது வருமோ என்று கலங்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் ஆபிரகாமோ, வானத்தின் நட்சத்திரங்களை நோக்கிப்பார்த்து, அவைகளையெல்லாம் தன்னுடைய சந்ததி என்றும், தன்னுடைய சந்ததி வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போல பெருகும் என்றும் அறிந்திருந்தான்.
எங்கே எதிரிகளின் விமானம் வருமோ, எங்கே ஏவுகணையின் மூலமாக அணுகுண்டுகள் தங்கள் தேசத்திலே வந்து விழுமோ என்று விஞ்ஞானிகள் பயந்து கலங்கி, ஆகாயமண்டலத்தை நோக்கி மின்கதிர்களை வீசக்கூடிய ரேடார் (Radar) இயந்திரங்களை எல்லை ஓரங்களிலெல்லாம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மனுஷன் நோக்கிப்பார்த்து எதிர்பார்ப்பதெல்லாம் குண்டுகள் விழுவதையும், எதிரிகளின் விமானங்களால் உலகம் அழிக்கப்படுவதையும்தான்!
ஆனால், நாம் வானத்தை நோக்கிப்பார்க்கும்போது நம் உள்ளம் பரவசமடைகிறது. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துவதால், நாம் வானமண்டலத்தைப் பார்த்து அதிலுள்ள சிருஷ்டி கர்த்தரைப் போற்றித் துதிக்கிறோம். அவரில் மனம் மகிழுகிறோம்.
வானங்கள் தேவனுடைய மகிமையை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. “வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்” (சங். 97:6) என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்: “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை” (ரோம. 1:20).
உலக மனிதன் சிருஷ்டிப்பிலே தனது அழிவைக் காண்கிறான். ஆனால் நாமோ சிருஷ்டிப்பிலே நம் சிருஷ்டிகர்த்தரைக் காண்கிறோம். விஞ்ஞானிகள் தொலைநோக்கியின்மூலமாக வானத்திலுள்ள நட்சத்திரங்களையும், விண்கோள்களையும்மட்டுமே காண்கிறார்கள். ஆனால் நாமோ, நம்முடைய விசுவாசக் கண்களினாலே வானமண்டலங்களுக்கு அப்பால் இருக்கிற கிறிஸ்துவைக் காண்கிறோம். வருவேன் என்று வாக்குரைத்துச் சென்ற அருமை இரட்சகரைக் காண்கிறோம்.
அன்று வானத்தை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருந்த கலிலேய மனுஷரைப் பார்த்து தேவதூதர்கள், ‘கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்’ என்று கேட்டுவிட்டு, ‘உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர், எப்படி உங்கள் கண்களுக்குமுன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்’ என்றார்கள் (அப். 1:11).
நினைவிற்கு:- “ஏனெனில், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்” (1 தெச. 4:16).