Appam, AppamAppam - Tamil

ஜூலை 27 – உத்தமம்!

“உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்” (நீதி. 10:9).

தேவனுக்கு முன்பாக நாம் உண்மையும், உத்தமுமாயிருக்கவேண்டும் என்கிற கருத்தானது, நீதிமொழிகளின் புஸ்தகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது.

உத்தமம் என்றால் என்ன? பொதுவாக உத்தமம் என்ற வார்த்தை உண்மையோடு இணைந்துவருகிறது. முழுமையும் நம்பப்படத்தக்க ஒரு குணாதிசயம். பொய்யோ, புரட்டோ இல்லாத மேன்மையான குணாதிசயம். அது நேர்மையையும், நீதியையும் விளங்கச்செய்கிறது. உத்தமமாய் இருக்கிறவர்களிடத்திலே தரமான நற்கனிகளைக் காணலாம். அவர்கள் மற்றவர்களை ஒருபோதும் வஞ்சிக்கவுமாட்டார்கள், ஏமாற்றவுமாட்டார்கள். ஆகவே உத்தமர்களாய் விளங்குகிறவர்கள் எப்போதும் எல்லாக்காரியங்களிலும் ஞானமுள்ளவர்களாய் நடப்பார்கள்.

கர்த்தர் ஒவ்வொருவரிடத்திலும் இந்த உத்தம குணத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார். நோவா தன் காலத்திலுள்ள எல்லா ஜனங்களின் மத்தியிலும் உத்தமராய் வாழ்ந்துவந்தார். ஆகவேதான் நோவாவுக்கு கர்த்தருடைய கண்களிலே தயவு கிடைத்தது (ஆதி. 6:8). மற்றவர்களெல்லாரும் பாவத்திலும் அக்கிரமத்திலும் ஜீவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நினைவுகள், தோற்றங்கள் நித்தமும் பொல்லாதவையாயிருந்தன. ஆகவே கர்த்தர் அவர்களை அழிக்கத் தீர்மானித்தபோது, உத்தமனாயிருந்த நோவாவை பேழைக்குள் பாதுகாத்துக்கொண்டார்.

அதுபோலவே கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, “நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” என்று சொன்னார் (ஆதி. 17:1).

‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்று வாழுகிறவர்களால் உத்தமமாய் ஜீவிக்கமுடியாது. போதிக்கிற பலரே தங்கள் போதனைகளைப் பின்பற்றுவதில்லை. காரணம், அவர்களில் உத்தமமில்லை. பல திருமணங்களை ஒழுங்குசெய்துகொடுக்கிற ஒருவருடைய மணவாழ்க்கையோ மகா தோல்வியாய் இருந்தது. பல குடும்பங்களை அவர் இணைத்து வைத்தார். ஆனால் அவர் குடும்பமோ சிதைந்துபோயிற்று. அவரிடம் உத்தமத்தன்மை இல்லாததே இதன் காரணம்.

பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளுகிறார்கள். பல பொருளாதார நிபுணர்கள் தங்கள் வாழ்க்கையில் பொருளாதார வசதியில்லாமல் வறுமையில் வாடுகிறார்கள்.  அவர்களுடைய வாழ்க்கையில் உண்மையுமில்லை, உத்தமமுமில்லை என்பதே இதன் காரணம்.  எவ்வளவு படித்திருந்தாலும் அவர்களுக்கு உத்தமம் தேவை. அப்படி உத்தமமிருந்தால்தான் நாம் அவர்களை நம்பிச் சார்ந்துகொள்ளமுடியும்.

தலைசிறந்த பிரசங்கியாராயிருந்த இ.ஏ. ஸ்பர்ஜன் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதும்போது, ‘பிரதம மந்திரியின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதுதான். ஆனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பை நீங்கள் நிறைவேற்றவேண்டுமென்றால் உத்தமமும் நீதியுமுள்ளவர்களாய் இருக்கவேண்டும்’ என்று எழுதினார்.

உங்களுடைய வாழ்க்கை ஞானத்துடன் கட்டப்பட்ட வீடாகவும், உறுதியான தூண் உள்ளதாகவும் இருக்கவேண்டுமா? உத்தமத்தை நாடுங்கள். மனுஷருக்கு முன்பாகவும், கர்த்தருக்கு முன்பாகவும் உண்மையும் உத்தமமுமாய் வாழத் தீர்மானியுங்கள். அப்பொழுது நீங்கள் நீதிமான்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.

தேவபிள்ளைகளே, கொஞ்சத்தில் உண்மையும் உத்தமமுமாயிருங்கள். கர்த்தர் உங்களை அநேகத்தின்மேல் அதிகாரியாய் வைப்பார்.

நினைவிற்கு:- “உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்” (உபா. 18:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.