Appam, Appam - Tamil

ஜூலை 04 – சமுகத்தப்பங்கள்!

“மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய் (யாத். 25:30).

தேவ சமுகத்தை நாம் நாடுவதுடன், அதன் சந்தோஷத்தினால் நிரப்பப்படவும் வேண்டும். மட்டுமல்ல, தேவசமுகத்தில் இருக்கும் அப்பங்கள் நம்முடைய ஆன்மீக உணவாக இருக்கவேண்டும். சரீரத்துக்கு எப்படி உணவு தேவையோ அதுபோலவே ஆத்துமாவுக்கும் கர்த்தருடைய வார்த்தை அத்தியாவசியத் தேவையாயிருக்கிறது.

பழைய ஏற்பாட்டிலே, ஆண்டவர் சமுகத்தப்பங்களுக்கான உபதேசங்களைக் கொடுத்தார். அந்த சமுகத்தப்பங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் பரிசுத்த மேஜையின்மேல் வைக்கப்பட்டிருந்தது. இந்த சமுகத்தப்பங்களைக்குறித்த உபதேசங்களை லேவியராகமம் 24:5-9 வரையுள்ள வேத பகுதியில் நாம் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்கும் கர்த்தர் ஒவ்வொருநாளும் மன்னாவை பொழிந்தருளப்பண்ணி அவர்களது தேவைக்கும் அதிகமாகவே கொடுத்தார். ஆனால் அவருடைய பரிசுத்த ஸ்தலத்திலே வாஞ்சையாய் இருந்து, தேவ சமுகத்துக்குக் கடந்து வந்தவர்களுக்குமட்டுமே அந்த சமுகத்தின் அப்பம் கிடைத்தது. எல்லா மனிதர்களும் வாசிக்கும்படி கர்த்தர் தமது வார்த்தையை வேத வசனங்களாகக் கொடுத்திருக்கிறார். இதுவே நமக்குக் கொடுக்கப்பட்ட மன்னா.

அவருடைய சமுகத்தை நாடி வாஞ்சித்து அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறவர்களுக்கு வேதத்தின் வெளிப்பாடுகளையும், ஆழமான ரகசியங்களையும், உன்னதமான உபதேசங்களையும் வெளிப்படுத்தித் தருகிறார். இது தேவ சமுகத்து அப்பம். தேவ சமுகத்தை வாஞ்சிக்க ஆர்வமில்லாதவர்கள் அந்த வெளிப்பாடுகளைப் பெறவேமுடியாது. பழைய ஏற்பாட்டிலே ஆசாரியர்கள் அந்த தேவ சமுகத்தின் அப்பத்தை அவருடைய சமுகத்திலே புசித்தார்கள். புதிய ஏற்பாட்டிலே கர்த்தர் நம்மையே ஆசாரியர்களாக்கியிருக்கிறார் (வெளி. 1:6).

நாம் அப்பம் உண்ணாமல் இருந்தால் ஆவிக்குரிய பெலனை இழந்துபோவோம், உள்ளான மனுஷனிலே வல்லமை இருக்காது, சத்துருவினுடைய போராட்டங்களை எதிர்த்து நிற்கவும் முடியாது. நம்முடைய வாழ்க்கையிலே போராட்டங்களும், சோதனைகளும், கஷ்டங்களும் வருவதற்கு முன்பு நாம் தேவ சமுகத்தை அணுகி, அவருடைய பிரசன்னத்தில் வேத வாக்கியங்களிலுள்ள வாக்குத்தத்தங்களை ஆவலோடு புசிக்க வேண்டும். நமக்காக அடுக்கடுக்காக பன்னிரண்டு அப்பங்களை ஆண்டவர் வைத்திருக்கிறார் அல்லவா?

அந்த பன்னிரண்டு அப்பங்கள் என்பது அப்போஸ்தல உபதேசங்களைக் குறிக்கிறது. இயேசுவுக்கு பன்னிரண்டு சீஷர்கள் இருந்தார்களல்லவா? அவர்கள்மூலமாய் தனிப்பட்ட மனிதனுடைய ஜீவியத்திற்கும், சபையின் வளர்ச்சிக்கும், அப்போஸ்தல உபதேசங்களை கர்த்தர் கொடுத்தார் அல்லவா!

அநேகர் போதுமான சமுகத்து அப்பங்களை புசிக்காததால் சிறு சோதனைகள் வந்தாலும் சோர்ந்துபோகிறார்கள். அவர்களுடைய உள்ளான மனுஷனில் பெலனில்லாமல் இருக்கிறார்கள். தேவபிள்ளைகளே, தேவசமுகத்தை மட்டுமல்ல, தேவ சமுகத்தின் அப்பங்களாகிய வேதத்தின் வெளிப்பாடுகளையும் வாஞ்சித்துப் பெற்றுக்கொள்ள முன்வாருங்கள்.

நினைவிற்கு:- “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன். உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரே. 15:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.