No products in the cart.
ஜூலை 03 – வானத்தின் வாசல்!
“இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்” (ஆதி. 28:17).
வானத்தின் வாசலைக்குறித்து இன்று தியானிப்போம். வீடுகளுக்கு வாசல் உண்டு, ஆலயங்களுக்கு வாசல் உண்டு. நகரங்களுக்கும்கூட வாசல் உண்டு. அதே நேரத்தில் வானத்திற்கும்கூட ஒரு வாசல் இருப்பதைக் கவனியுங்கள்.
ஆலயம் அறியப்படாதிருந்த ஒரு இடத்தில் ஆண்டவரைச் சந்தித்த யாக்கோபு வானம் திறந்திருக்கிறதைக் கண்டார். பூமிக்கும் வானத்துக்கும் ஏணிப்படி வைத்திருக்கிறதைக் கண்டார். அந்த ஏணியில் தேவதூதர்கள் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தார்கள்.
இந்த ஏணியின் வழியாய் மனிதன் ஒருவனும் பரலோகத்திற்கு ஏறிச்சென்றதை யாக்கோபு காணவில்லை. அந்த ஏணியில் ஏற போதுமான பரிசுத்தம் மனிதனுக்கு இல்லை என்பதே இதன் காரணம். பாவத்தைப் பார்க்கக்கூடாத சுத்தக்கண்ணனாகிய தேவனை நெருங்கி கிட்டிச்சேரும் தைரியமும் மனிதனுக்கு இல்லை. எனவேதான், தேவதூதர்கள்மட்டும் அந்த ஏணியை உபயோகித்தனர்.
ஆனால், புதிய ஏற்பாட்டுக் காலத்துக்கு வரும்போது இயேசுவே அந்த ஏணியாய் மாறினார். அவரே பரலோகத்தையும், பூலோகத்தையும் ஒன்றாய் இணைத்தார். மனிதன் பரலோகத்திற்குச் செல்லும் பாக்கியத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார். யோவான் தரிசனத்தில் பார்த்தபோது திரளான ஜனங்கள் பரலோகத்தில் ஏறியிருப்பதைக் கண்டார். மாத்திரமல்ல, அங்கு ஏறிவருவதற்கான அழைப்பும் யோவானுக்குக் கிடைத்தது. இயேசு நமக்கு வாசலாய் மாறியது எத்தனை பெரிய பாக்கியம்! நானே வழி, என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று அவர் சொன்னாரே!
வேதத்தில் பல வாசல்களைக்குறித்து நாம் வாசிக்கிறோம். வெளி. 3:8ல் ஒரு வாசலைக்குறித்து வேதம் சொல்லுகிறது. இது திறந்த வாசல். ‘இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அதை ஒருவனும் பூட்டமாட்டான்’ என்று கர்த்தர் சொன்னார்.
மனிதன் ஒரு வாசலை அடைத்தால், கர்த்தர் ஏழு மகிமையான மேன்மையான வாசல்களை நமக்குத் திறந்து தருகிறார். ஆசீர்வாதத்தின் திறவுகோல்கள் அத்தனையும் அவருடைய கரத்தில்தான் இருக்கின்றன. அவர் தாவீதின் திறவுகோலை நமக்கு முன்பாக வைத்திருக்கிறார். சுவிசேஷத்தின் வாசல்களும், ஊழியத்தின் வாசல்களும், பரிசுத்தத்தின் வாசல்களும், ஜெபத்தின் வாசல்களும் திறந்தேயிருக்கின்றன.
இன்று ஒரு திறந்த வாசலை கர்த்தர் உங்களுக்குக் காண்பிக்கிறார். பல தடைகளின் பாதையில் நீங்கள் நடந்து வந்தீர்கள். போராட்டத்தின் பாதையில் நடந்து வந்தீர்கள். முன்னேற முடியாமல் தவித்தீர்கள். ஆனால், கர்த்தரோ இன்றைக்கு திறந்த வாசலை உங்களுக்கு முன்பாகக் கட்டளையிடுகிறார்.
இஸ்ரவேலர்கள் கானானுக்குள் வந்தபோது, எரிகோ வாசல்கள் அடைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலர் துதியோடுச் சுற்றி வந்தபோது எரிகோ மதில்களை விழும்படி செய்து, கர்த்தர் வாசலைத் திறந்தார். நீங்களும் அப்படியே தேவனைத் துதியுங்கள். உங்களுக்கு விரோதமாய் அடைபட்டிருக்கிற அத்தனை வாசல்களையும் தேவன் அற்புதமாக திறந்து கொடுப்பார்.
நினைவிற்கு:- “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்” (சங். 100:4).