Appam, Appam - Tamil

ஜுன் 29 – ஜெயமாய் விழுங்குகிறவர்!

“அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்” (ஏசா. 25:8).

மரணம் ஒரு முடிவல்ல. அதை, ‘இளைப்பாறுதல்’ என்று இயேசுகிறிஸ்து சொன்னார். மரித்தோர்களை, இயேசுகிறிஸ்து ‘நித்திரை செய்கிறார்கள்’ என்றே குறிப்பிட்டார். அப்படியே லாசருவை, நாயீனூர் விதவையின் மகனை, யவீருவின் மகளை, நித்திரையிலிருந்து எழுப்புவதுபோல, உயிரோடு எழுப்பினார்.

உலகத்தார் தங்களுக்கு அருமையானவர்களை இழந்து தவிக்கும்போது துடிக்கிறார்கள், ஆறுதல் பெறமுடியாமல் அங்கலாய்க்கிறார்கள். ஆனால் தேவனுடைய பிள்ளைகளோ, கிறிஸ்து இயேசுவுக்குள் ஆறுதல் பெற்று, ‘அவர்களை மீண்டும் காண்போம்’ என்ற நம்பிக்கையிலே தங்களைத் தேற்றிக்கொள்ளுகிறார்கள். கிறிஸ்தவமார்க்கத்தில், உயிர்த்தெழுதலின் நம்பிக்கை நமக்கு உண்டு.

இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்ததின் ஒரு நோக்கம், மரணத்தை ஜெயமாக விழுங்கி மரண பயத்தோடு இருக்கிறவர்களை விடுதலையாக்குவதாகும். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25,26).

இயேசுகிறிஸ்துதாமே ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார். வேதம் சொல்லுகிறது, “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்” (எபி. 2:9).

கர்த்தருடைய இரண்டாவது வருகையிலே கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்படுவோம் (1 தெச. 4:16). அப்பொழுது, “அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்” (1 கொரி. 15:54).

மரணத்தையும், பாதாளத்தையும், சாத்தானையும் ஜெயித்தவர் இயேசு. அவர் மரித்து, உயிரோடு எழுந்ததினால் மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறார் (வெளி. 1:18). ஆகவே நாம் மரணத்தைக் குறித்து அஞ்சுவதில்லை. மரணத்தின் முதுகெலும்பைத் தட்டி, “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்று வெற்றி முழக்கமிடுகிறோம் (1 கொரி. 15:55).

இயேசு மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்து சென்றார். தம் ஆவியை பிதாவினுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார். மூன்றாம் நாள் மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்து, உயிர்த்தெழுகிறவர்களில் முதற்பலனானார். “நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் (உபா. 32:40).

உலக மக்களுக்கு மரணம் கசப்பானதுதான். மகா வேதனையானதுதான். ஆனால் நமக்கோ அது நம் அருமை ஆண்டவரைக் கிட்டிச்சேரும் இனிய பாலமாக விளங்குகிறது. மண்ணுக்குரியவர்களை விண்ணுக்குக் கொண்டுசெல்லும் அற்புதமான ஏணியாக விளங்குகிறது.

நினைவிற்கு:- “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங். 23:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.