No products in the cart.
ஜுன் 20 – பயம் நீக்கும் கரங்கள்!
“அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். … சீஷர்கள் … முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்” (மத். 17:2,6,7).
ஒருமுறை இயேசுகிறிஸ்து பேதுருவையும், யாக்கோபையும், அவனுடைய சகோதரனாகிய யோவானையும் அழைத்துக்கொண்டு தனித்திருக்கும்படி, உயர்ந்த மலையின்மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது என்றும், அவருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று (மத். 17:1,2) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.
சீஷர்கள் அந்த மறுரூப மலையின் காட்சியைப் பார்த்தார்கள். எலியாவையும் மோசேயையும் கண்டார்கள். ஒளியுள்ள மேகம் அவர்கள்மேல் நிழலிட்டதைப் பார்த்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு முகங்குப்புற விழுந்து மிகவும் பயந்தார்கள். இயேசுவினுடைய அன்புக் கரங்கள், பயந்து தரையிலே விழுந்து கிடந்த அவர்களைத் தொட்டது. ‘எழுந்திருங்கள், பயப்படாதிருங்கள்’ என்றார்.
ஆம், இயேசுகிறிஸ்துவினுடைய கரம் பயம் நீக்கும் அருமருந்தாகும். அவருடைய கரம் தொடும்போது, உங்களுடைய பயங்கள் எல்லாம் பறந்து ஓடிப்போகும். அவருடைய கரமே உங்களைத் திடப்படுத்தி பலப்படுத்தக்கூடியது.
பழைய ஏற்பாட்டிலே தானியேல் திடனற்றுப்போனபோது தேவதூதன் வந்து தன் கரத்தால் தொட்டு தானியேலை திடப்படுத்தினார். வேதம் சொல்லுகிறது, “அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக் கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன். அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து …” (தானி. 8:18) தேவதூதனிலும் பெரிய கரம், வல்லமையுள்ள கரம் இயேசுகிறிஸ்துவின் கரங்கள்.
சீஷர்கள் மேல்வீட்டறையில் தங்களை அடைத்துக்கொண்டு கலங்கிப் பயந்து நின்றபோது, அவர் தம்முடைய கைகளையும், கால்களையும் காண்பித்து அவர்களைத் திடப்படுத்தினார். மறுரூபமலையிலோ அவர்களைத் தம்முடைய கரங்களினால் தொட்டு பயப்படாதேயுங்கள் என்று சொன்னார்.
இன்னொரு சம்பவத்தையும் வெளிப்படுத்தின விசேஷத்திலே நாம் வாசிக்கலாம். பத்மு தீவில் அப். யோவான் ஆவிக்குள்ளானபோது, கிறிஸ்துவின் மகிமையான சாயலைக் கண்டார். அவர் தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல் இருந்தது.
அந்தக் காட்சியைக்குறித்து அப். யோவான், “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே நான் முந்தினவரும், பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறேன்” (வெளி. 1:17) என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, உங்கள் நோய்களிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் உங்களை விடுவிக்கக் கர்த்தர் ஆவலாயிருக்கிறார். அன்றைக்கு சீஷர்களின் பயத்தை நீக்கிய கரம், உங்களுடைய எல்லா பயங்களையும் நீக்கி, உங்களை திடப்படுத்தும்படியாக நீட்டப்பட்டிருக்கிறது. விசுவாசத்தோடு அந்த கரத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ. 1:7).