No products in the cart.
ஜுன் 10 – நீர்ப்பாய்ச்சுகிறவர்!
“தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்” (சங். 65:9).
மேலேயுள்ள வசனத்திலே, கர்த்தர் செய்கிற மூன்று அருமையான செய்கைகளைக்குறித்து வாசிக்கிறோம். முதலாவது, தேவனாகிய கர்த்தர் உங்களை அன்போடு விசாரிக்கிறார். இரண்டாவது, சகல நன்மைகளையும் அருளிச்செய்து நீர்ப்பாய்ச்சுகிறார். மூன்றாவது, தேவ நதியினால் உங்கள் வாழ்க்கையை மிகவும் செழிப்பாக்குகிறார்.
கர்த்தரை நோக்கிப் பார்த்து, தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக அன்போடு அவரைத் துதியுங்கள். உங்களுக்குள் உலகப்பிரகாரமான சாதாரண நதியை கொண்டுவரவில்லை. தண்ணீர் நிறைந்த தேவ நதியைக் கொண்டுவந்து, உங்களுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் செழிப்பாக்குகிறவரை மகிமைப்படுத்தாமலிருப்பது எப்படி?
ஒவ்வொரு நதிக்கும் ஒரு உற்பத்தி ஸ்தானமுண்டு. அது ஓடுகிற பாதையுமுண்டு. அந்த நதி விளைவிக்கும் பலாபலன்களுமுண்டு. முடிவில் சங்கமமாகும் இடமுமுண்டு. சாதாரணமாக நதிகள், மலை உச்சியிலோ, அல்லது ஏரியிலோ உற்பத்தியாகி, பல சிறு சிறு ஓடைகளை தன்னிடத்தில் சேர்த்துக்கொண்டு, பெரிய நதியாக கடலை நோக்கிப் பாய்ந்து ஓடி வருகின்றன. செல்லுகிற சமவெளிகளிலெல்லாம் செழிப்பை உண்டாக்குகின்றன.
ஒரு நதியைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள், அந்த நதி எங்கேயிருந்து ஆரம்பமாகிறது என்பதைக் குறித்து கவனிப்பார்கள். தாமிரபரணி ஆறு, குடகுமலையில் உற்பத்தியாகி ஓடி வருகிறது.
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற வடநாட்டு நதிகளெல்லாம், பனி படர்ந்த இமயமலையிலுள்ள மானசரோவர் என்ற ஏரியில் உற்பத்தியாகி பாயும் இடங்களையெல்லாம் செழிப்பாக்குகின்றன. இவைகளில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடுவதால் வற்றாத நதிகளாக இருக்கின்றன.
ஆனால் நமக்குள்ளே பாய்ந்து ஓடுகிற பரிசுத்த ஆவியானவரின் உற்பத்தி ஸ்தானம் எது? அப். யோவானுக்கு கர்த்தர் அதை வெளிப்படுத்திக்கொடுத்தார். ஆம், ஆவியானவர், “பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்” (வெளி. 22:1) என்று சொல்லுகிறார்.
பரலோக சீயோன் மலையிலுள்ள சிங்காசனத்திலிருந்து, அதாவது, அண்ட சராசரங்களை அரசாளுகிற இராஜாதி இராஜாவின் சமுகத்திலிருந்து அந்த நதி எனக்குள்ளும் உங்களுக்குள்ளும் கடந்துவருகிறது. பரலோக உச்சிதங்களையெல்லாம் கொண்டுவருகிறது. உன்னதமானவரின் ஆசீர்வாதங்களையெல்லாம் கொண்டுவருகிறது.
அந்த நதியின் மூலம், புத்துணர்வைப் பெறுகிறோம். சுத்திகரிப்பைப் பெறுகிறோம். சகல நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெறுகிறோம். தெய்வீக வல்லமையாலும், மகிமையாலும் அந்த நதி நம்மை நிரப்புகிறது.
இந்த நதி வற்றாத ஜீவ நதி. வருடத்திலுள்ள முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் உங்களுக்குள் வந்துகொண்டேயிருக்கும். உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்திக்கொண்டேயிருக்கும். அந்த நதியால் நீங்கள் கனி கொடுக்கிறவர்களாய் விளங்குவீர்கள். ஆவியின் கனிகள் அத்தனையும் உங்களிலே காணப்படுவதாக.
தேவபிள்ளைகளே, நீங்கள் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தமடைந்து, பூரணராய்க் காணப்படும்படியாக அந்த நதி உங்களுக்கு உதவி செய்துகொண்டேயிருக்கும்.
நினைவிற்கு:- “அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்” (சங். 24:2).