situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

ஜனவரி 28 – அறிக்கையில் நிலைத்திருங்கள்!

“இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான் (1 யோவா. 4:15).

கிறிஸ்தவ வாழ்க்கையில் அறிக்கையிடுவது என்பது மிகவும் அவசியம். இயேசுவானவரே தேவன் என்று அறிக்கையிடும்போதுதான் இரட்சிப்பையே நாம் பெற்றுக்கொள்ளமுடியும். மட்டுமல்ல, அந்த அறிக்கையிலே நாம் நிலைத்திருக்கவேண்டியதும் அவசியம். “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத். 24:13) என்று வேதம் சொல்லுகிறது.

அறிக்கை என்று சொல்லும்போது, அதில் மூன்று வகையான அறிக்கைகளை காணலாம். முதலாவது பாவ அறிக்கை. பழைய ஏற்பாட்டிலே தங்கள் பாவங்களுக்காக ஆட்டுக்குட்டியை நிவாரணபலியாகக் கொண்டுவந்து தங்கள் கைகளை அந்த ஆட்டின்மேல் வைத்து பாவ அறிக்கை செய்தார்கள் (லேவி. 16:21).

வேதம் சொல்லுகிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9). “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).

ஒரு முறை பாவங்களை அறிக்கையிட்டு இரட்சிப்பைப் பெற்ற பின்பு, திரும்பத் திரும்ப பாவத்தில் விழுந்துகொண்டு, ஒவ்வொரு வாரமும், “நாங்கள் செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்துவந்தோம். எங்களுக்கு சுகமே இல்லை” என்று சிலர் அறிக்கை செய்துகொண்டேயிருக்கிறார்கள். என்றைக்கு இவர்கள் சுகம் பெறுவது? என்றைக்கு செய்யத்தக்கவைகளைச் செய்வது?

இரண்டாவது ஒரு அறிக்கை உண்டு. அது விசுவாச அறிக்கை. நாம் நம்முடைய நம்பிக்கையை விசுவாசத்தோடு அறிக்கை செய்யவேண்டும். வாக்குத்தத்தங்களை அறிக்கை செய்யவேண்டும். அப். பவுல், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்றுஅறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” என்றார் (2 தீமோ 1:12).

யோபுவும்கூட, தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடும்போது “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்று அறிக்கையிட்டார் (யோபு 19:25). “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோம. 10:10).

மூன்றாவது ஒரு அறிக்கை உண்டு. அந்த அறிக்கைதான் கர்த்தரிலே நம்மை நிலைத்திருக்கச்செய்யும் அறிக்கை. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணும் அறிக்கையே அந்த அறிக்கை (1 யோவா. 4:15). ஒரு நாள் பேதுரு இயேசுவைப் பார்த்து, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கை செய்தார். அவர் அப்படி அறிக்கைசெய்ததைக் கண்ட இயேசு மனம் மகிழ்ந்தார்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் நாமத்தைக்குறித்து அறிக்கைபண்ண ஒருபோதும் வெட்கப்படாதிருங்கள். இயேசுவே கிறிஸ்து, அவரே இரட்சகர் என்று அறிக்கைபண்ணுங்கள். அப்பொழுது நீங்கள் கர்த்தரிலே நிலைத்திருப்பீர்கள்!

நினைவிற்கு:- “முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் ” (ரோம. 14:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.