No products in the cart.
ஜனவரி 27 – அன்பிலே நிலைத்திருங்கள்!
“அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவா. 4:16).
கர்த்தரையும் நம்மையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ள கயிறுதான் அன்பு. தேவன் அளவற்ற அன்பினால் நம்மில் அன்புகூர்ந்து நம்மைத்தேடி வந்தார். ஒவ்வொரு நாளும் அவர் தம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறார். நாமும் அவரில் அன்புகூர வேண்டும், அவருடைய அன்பிலே நிலைத்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
தேவன் அன்பாயிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். தேவனுடைய அன்பைக்குறித்து பல பிரசங்கங்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் அநேகம்பேருக்குத் தெரியாத ஒன்று, அவர் நமது அன்புக்காக ஏங்குகிறார் என்பதுதான். நாம் அவருடைய அன்புக்காக ஏங்குவதுபோல கர்த்தரும்கூட, நம்முடைய அன்புக்காக ஏங்குகிறார்.
ஆகவேதான் பத்து கட்டளைகளைக் கொடுக்கும்போது பிரதானமான கட்டளையாக, “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்று சொன்னார் (உபா. 6:5).
எபேசு சபையானது, தேவன்பேரில் வைத்த அன்பைவிட்டு சற்று குறைந்தபோது அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” என்று துக்கத்தோடு சொன்னார் (வெளி. 2:4). ஒரு சாதாரணமான மனுஷனாகிய பேதுருவிடம் வந்து, “பேதுருவே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று திரும்பத் திரும்ப கேட்டார். அந்தக் கேள்வி பேதுருவுடைய உள்ளத்தை உடைத்தது. “நான் உம்மிடத்தில் அன்பாயிருக்கிறேன் என்பதை தேவரீர் அறிவீர்” என்று பேதுரு பதிலளித்தார்.
சிலர் இரட்சிக்கப்பட்ட புதிதிலே கர்த்தரில் அதிகமாய் அன்புகூர்ந்து ஜெபிப்பார்கள். கர்த்தருடைய பாதத்துக்கு ஓடுவது அப்பொழுது அவர்களுக்கு மனமகிழ்ச்சியாய் இருக்கும். ஆலய ஆராதனைகளில் உற்சாகமாய் கலந்துகொண்டு சாட்சி கொடுப்பார்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல அந்த அன்பிலே நிலைத்திராமல் பின்வாங்கிப்போய்விடுவார்கள். கர்த்தரோ ஒருநாளும் நம்மேல் வைத்த அன்பிலே பின்வாங்குவதில்லை. அவர் தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே முடிவுபரியந்தம் அன்புவைத்தார். அப்படியே நாமும் அன்பில் நிலைத்திருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
அப். பவுல், கர்த்தருடைய அன்பின் ஆழங்களை தியானித்துப்பார்த்தார். சிருஷ்டிப்பிலே, ஒரு தகப்பனாகவும், தாயாகவும், போதகராகவும், சகோதரனாகவும், சிநேகிதனாகவும், ஆத்தும நேசராகவும் எப்படியெல்லாம் அன்புகூர்ந்தார் என்பதை தியானித்தார். கல்வாரிச் சிலுவையிலே அவர் அன்பு குருதியாய் ஒழுகியபோது அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. “இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா. 2:20) என்று கூறினார். தேவபிள்ளைகளே, அவருடைய அன்பு உங்களுடைய அன்பைக் கேட்கிறது. அவரது அன்பின் ஆழம் ஆழத்தை கூப்பிடுகிறது.
நினைவிற்கு:- “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்” (எபே. 2:4,5).