No products in the cart.
ஜனவரி 25 – இருதயத்தில் ஜீவ ஊற்று!
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதி. 4:23).
இருதயம் என்பது ஒரு மின் உற்பத்திநிலையத்தைப் போன்றது. மின்சாரமானது எப்படி விளக்குகளை எரியவைத்து, மின் விசிறிகளை சுழலவைத்து, பெரிய பெரிய தொழிற்சாலைகளை இயக்குகிறதோ, அதுபோலவே மனுஷனுடைய இருதயம் அவனது உள்ளான ஜீவியத்தின் மூலஸ்தானமாயிருக்கிறது. அந்த இருதயத்திலிருந்துதான் எண்ணங்கள், நினைவுகள், ஆலோசனைகள் என அனைத்துமே புறப்பட்டு வருகின்றன. அந்த இருதயத்திலிருந்து வெளிப்படும் கட்டளையைத்தான் சரீரம் செயல்படுத்துகிறது!
இன்னும் சொல்லப்போனால், அந்த இருதயம்தான் நமது உள்ளான மனுஷனின் வீடாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவை உங்களுடைய சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது, கிறிஸ்துவின் ஆவி உங்கள் உள்ளான மனுஷனோடு உறவாடும்படி இருதயத்திற்குள் வாசம்பண்ண வருகிறது.
ஆகையினால்தான் அப். பவுல், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசம்பண்ணுவாராக (எபே. 3:17) என்றும், “இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (2 கொரி. 13:5) என்றும் கூறுகிறார்.
ஒரு சிறுபிள்ளை ஒருமுறை ‘கிறிஸ்துவைபோல மிகப்பெரியவரும் இல்லை. மிகச் சிறியவரும் இல்லை’ என்றதாம். அந்த தகப்பன் அதைக் கேட்டு சிரித்து, ‘அது எப்படி அவர் ஒரே நேரத்தில் மிகப்பெரியவராகவும், மிகச் சிறியவராகவும் இருக்கக்கூடும்?’ என்று கேட்டார். அந்தக் குழந்தை அதற்கு “இயேசு கிறிஸ்து வானாதி வானம்கொள்ளாத மிகப் பெரிய மகிமையின் இராஜா. ஆகவே, அவரே மிகப்பெரியவர். அதே நேரத்தில் அவர் என் சிறிய இருதயத்திற்குள் வாசஞ்செய்கிறபடியினால் அவர் சிறியவராகவும் இருக்கிறார்’ என்று சொன்னது. அதைக் கேட்டு அந்தப் பெற்றோர் ஆனந்தப்பரவசமடைந்தார்கள். ஆம், இது பெரிய சத்தியம். ஆழமான இரகசியம். மனுஷரின் மத்தியில் தேவாதி தேவன் வாசஞ்செய்கிறாரே!
இருதயமே சகல எழுச்சிகளின் இருப்பிடம். அங்கேயிருந்துதான் துயரமும், மகிழ்ச்சியும், திகைப்பும், நொறுங்குண்ட பெருமூச்சுகளும் வருகின்றன. அதே நேரத்தில் இருதயமானது நம்முடைய சித்தத்தின் இருப்பிடமாகவும் இருக்கிறது. நம்முடைய தீர்மானங்கள், நம்முடைய கீழ்ப்படிதல், நம்முடைய மன உறுதி, விருப்பம் ஆகியவையெல்லாம் அங்கிருந்துதான் புறப்படுகின்றன.
இருதயமே ஞானத்தின் இருப்பிடமாகும். சாலொமோன் கர்த்தரிடத்திலிருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டது ஞானமும் உணர்வுமுள்ள இருதயமும் ஆகும் (1 இரா. 3:9,12). இருதயம் நமது மனச்சாட்சியின் இருப்பிடமாக இருக்கிறது. தேவசந்நிதிக்குள் சந்தோஷமாய்ப் பிரவேசிக்கும்போது நம்முடைய மனச்சாட்சியில் பாவங்கள் இருக்கக்கூடாது. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும் காணப்படுங்கள் (எபி. 10:22) என்று வேதம் சொல்லுகிறது.
தேவபிள்ளைகளே, உங்கள் இருதயத்தில் சாத்தானுக்கு இடங்கொடாதேயுங்கள். அதனை கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரித்து, பாவம் ஒருநாளும் உட்புகாதபடி காத்துக்கொள்ளுங்கள். இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரின் நிறைவு எப்பொழுதும் இருக்கட்டும்.
நினைவிற்கு:- “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத். 5:8).
