Appam, Appam - Tamil

ஜனவரி 23 – இருதயத்தின் நினைவு!

“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான் (நீதி. 23:7).

ஒரு மனிதனின் இருதயத்தின் நினைவுகள், வாயின் வார்த்தைகள், கரங்களின் கிரியைகள் ஆகிய மூன்றும்தான் அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. வேரானது பரிசுத்தம் உள்ளதாய் இருந்தால்தான் செடியும் பரிசுத்தமுள்ளதாய் இருக்கும். செடிகள் பரிசுத்தமுள்ளதாய் இருந்தால்தான் அவற்றின் கனிகளும் பரிசுத்தமுள்ளதாயிருக்கும். இருதயத்தின் நினைவுகள்தான் சொற்களைக் கொண்டுவருகின்றன. பின்பு, சொற்களே செயல்களாய் மாறுகின்றன.

தேவபிள்ளைகள் தங்களுடைய இருதயத்தின் நினைவுகளில்கூட ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். வேதம் சொல்லுகிறது, “எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:5). சிந்தனையில் ஜெயம்கொள்ளுகிற எவனும் தன் வாழ்க்கையை பரிசுத்தத்துடன் பாதுகாத்துக்கொள்வான்.

கர்த்தர் உங்களுடைய சிந்தனைகளை தூரத்திலிருந்தே அறிந்துவிடுகிறார். அவருடைய பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. இயேசுவின் நாட்களில் பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் என்பவர்களுடைய நினைவுகளை அவர் அறிந்தவராயிருந்தார். “நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?” என்று கேட்டார் (மத். 9:4).

அதுபோலவே, நோவாவின் நாட்களில் “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டார்” (ஆதி. 6:5). ஆகவே உங்கள் எண்ணங்களைக்குறித்து அதிக ஜாக்கிரதையாய் இருங்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு சகோதரியின் எண்ணங்களில் சாத்தான் உடுருவினான். நீ தற்கொலை செய்துதான் மரிப்பாய் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அவள் அந்த எண்ணத்தைக் கொண்டுவந்த சத்துருவைக் கடிந்துகொள்ளவில்லை. இயேசுவின் இரத்தக்கோட்டைக்குள் தன்னை மறைத்துக்கொள்ளவில்லை. எனவே, அவருக்குள் அந்த தற்கொலை எண்ணம் நாளுக்குநாள் வலுக்க ஆரம்பித்தது. அவள் தனது கணவரிடமும் “நான் தற்கொலை செய்துதான் மரிக்கப்போகிறேன்” என்று பேச ஆரம்பித்தாள். அவரும் அந்த வார்த்தைகளுக்காக அவளைக் கடிந்துகொள்ளவில்லை. அந்தோ பரிதாபம்! ஒருநாள் அவளுடைய கணவன் வேலைக்குப் போயிருந்தபோது, அந்த சகோதரி தன்மேல் எண்ணெயை ஊற்றி, தீ வைத்துக்கொண்டு மரித்துப்போனார்.

இன்றைக்கு அநேகர், சிந்தனையிலே பாவ இன்பங்களை கற்பனை செய்துபார்க்கிறார்கள். திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, தீய உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது துணிகரமாய் பாவச் செயல்களில் விழுகிறார்கள். பிறகு, “ஐயோ, பாவம் செய்துவிட்டேனே” என்று புலம்பி அழுகிறார்கள்.

ஒரு மனிதன், ஒரு பாவத்தைச் செயலில் கொண்டுவருவதற்கு முன்பே அதைத் தன் இருதயத்தின் சிந்தனையில் செய்துமுடித்துவிடுகிறான். பின்புதான் அவன் தன் இருதயத்தில் உருவாக்கினதை செயலில் கொண்டுவருகிறான். தேவபிள்ளைகளே, உங்கள் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் காவல் வையுங்கள்.

நினைவிற்கு:- “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; …. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் (யாக். 1:13,14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.