No products in the cart.
ஜனவரி 21 – என் இருதயத்தில்!
“என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங்.119:10,11).
கர்த்தருடைய வார்த்தைகளை எப்போதும் நம் இருதயத்தில் நிறுத்திவைப்பதுடன் வாழ்க்கையில் அவற்றை செயல்படுத்தவும் வேண்டும். அநேகருடைய இருதயத்தில் கசப்புகளும், வைராக்கியங்களும் குடியிருக்கின்றன. ஆனால் யார் யார் கர்த்தருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய வசனத்தின்படி செய்யத் தங்களை அர்ப்பணிக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கை சமாதானமும் சந்தோஷமும் நிறைந்ததாயிருக்கும்.
இன்றைக்கான தலைப்பு வசனம் 119ம் சங்கீதத்தில் இடம்பெற்றுள்ளது. வேதத்திலுள்ள எல்லா அதிகாரங்களிலும் 119ம் சங்கீதமே அதிகமான வசனங்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு வசனமும் வேதத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த 119-ம் சங்கீதத்தை வேதபாரகனாகிய எஸ்றா எழுதியிருக்கக்கூடும் என்கிறார்கள்.
“கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன்” (எஸ்றா 7:10,11) என்று எஸ்றாவைக் குறித்து வேதம் சொல்லுகிறது.
கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை வேதபுத்தகத்திலே நமக்கு எழுதி வைத்திருக்கிறார். இது மனுக்குலத்திற்கு கொடுக்கப்பட்ட மாபெரும் ஈவாகும். வேதத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணருகிறீர்களா? அதைப் பொன்னிலும் பசும்பொன்னிலும் விரும்பத்தக்கதாக ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதாய்ச் சுவைக்கிறீர்களா?
கர்த்தருடைய வாக்கு உங்களுக்குள்ளே இருக்கும்போது, நீங்கள் பாவத்துக்கு விலகியிருப்பீர்கள். அவருடைய வார்த்தை உங்களுக்குள்ளே இருக்கும்போது விசுவாசத்துடன் விளங்குவீர்கள். அவருடைய வார்த்தைகள் உங்கள் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கும் (சங். 119:105).
இன்று உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளை கவனித்துப்பாருங்கள். எந்தெந்த நாடுகள் வேதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கர்த்தரை உயர்த்தினதோ அந்தந்த நாடுகளெல்லாம் உயர்ந்திருக்கின்றன. எந்தெந்த நாடுகள் கர்த்தரையும் வேதத்தையும் மறந்தனவோ அவைகள் பின்னால் தள்ளப்பட்டிருக்கின்றன.
விக்டோரியா மகாராணி வேதபுத்தகத்தை உயர்த்தி இந்த வேதபுத்தகமே எங்களுடைய தேசத்தின் மேன்மைக்கு காரணம் என்று முழங்கியதைக் கர்த்தர் கேட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஆசீர்வதித்தார். அவர்கள் உலகத்தின் பெரும்பகுதியை அரசாண்டார்கள்.
தேவபிள்ளைகளே, வேதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேன்மை அடைவீர்களாக!
நினைவிற்கு:- “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்” (சங். 119:1-3).
