No products in the cart.
ஜனவரி 20 – கடின இருதயம்!
“இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்” (சங்.95:8).
உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள். கர்த்தர் உங்களோடு பேசவேண்டுமென்று விரும்புகிறார். உங்களை உயிர்ப்பிக்கவேண்டுமென்று விரும்புகிறார். உங்களை வழிநடத்தவேண்டுமென்று விரும்புகிறார்.
கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க ஆயத்தமாயிருங்கள். பகலின் குளிர்ச்சியான வேளையிலே ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார்கள் (ஆதி. 3:8). பகலின் குளிர்ச்சியான வேளை எது? அதிகாலை மூன்று மணிமுதல் நான்கு மணிவரைதான் குளிர்ச்சியான வேளை என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். கர்த்தர் சொன்னார்: “அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” (நீதி. 8:17).
உலக சத்தங்கள் காதுகளிலே நுழைவதற்கு முன்பாகவே கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க அதிகாலையில் எழுந்திருங்கள். குளிர்ச்சியான வேளை என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அது ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்ப குளிர்ச்சியானவிதத்தில் பிரியமாய் நடந்துகொள்ளும் வேளையாகும். கர்த்தரைத் துதித்து ஆராதிக்கும்போது அவருடைய உள்ளம் குளிருகிறது.
எலிசா தீர்க்கதரிசி கர்த்தருடைய சத்தத்தை ஜனங்களுக்குக் கொண்டுவருவதற்காக முதலாவது, தேவபிரசன்னத்திற்காக ஏங்கினார். ஒரு சுரமண்டலக்காரன் அந்த வாத்தியக்கருவியை மீட்ட ஆரம்பித்தபோது, கர்த்தருடைய இனிமையான பிரசன்னம் இறங்கிவந்தது. தீர்க்கதரிசன அபிஷேகம் இறங்கிவந்தது. அப்பொழுது அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார் (2 இரா. 3:15).
வேதத்திலே பிலேயாம் என்ற ஒரு தீர்க்கதரிசியைக்குறித்து வாசிக்கிறோம். அவர் கர்த்தர் தன்னிடத்தில் பேசும்படி, தேவ சத்தத்தைக் கேட்டு தீர்க்கதரிசனம் உரைக்கும்படி ஏழு பலிபீடங்களைக் கட்டி கர்த்தருக்கென்று பலியிட்டு, கர்த்தருடைய சத்தத்திற்குக் காத்திருந்தார் (எண். 23:1,2).
இன்றைக்கு கர்த்தர் விரும்புகிற பலி, ஆடு மாடுகள் அல்ல. நொறுங்குண்ட ஆவியே (சங். 51:17). கர்த்தர் விரும்பும் பலி உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி. நீங்கள் நருங்குண்ட, நொறுங்குண்ட இருதயத்தோடு ஸ்தோத்திரபலியை ஏறெடுக்கும்போது தேவபிரசன்னம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்.
கர்த்தருடைய மெல்லிய சத்தம் உங்களுடைய ஆவியிலே தொனிக்கும். ஆயிரக்கணக்கான உலக சத்தங்களின் மத்தியிலே, “இது என் நேசரின் சத்தம்” என்று பிரித்து உணர்ந்துகொள்ளும்படி உங்கள் ஆத்துமாவிலே விழிப்புணர்ச்சியைக் கர்த்தர் தந்தருளுவார். “நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்” (உன். 5:2).
தேவபிள்ளைகளே, உங்களோடு பேசி மகிழ தேவகுமாரன் இறங்கிவருகிறார். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மெல்லிய குரலில் உங்களோடு பேச விரும்புகிறார். ஒரு தாய் தேற்றுவதைப்போல தேற்றுகிற, அந்த பாசம் மிகுந்த குரலுக்காக எப்பொழுதும் உங்கள் உள்ளத்தைத் திறந்துவையுங்கள். அவர்களுடைய மெல்லிய சத்தத்தைக் கேட்டுப் பரவசமடையுங்கள்.
நினைவிற்கு:- “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவா. 14:26).
