Appam, Appam - Tamil

ஜனவரி 17 – நொறுங்குண்ட இருதயம்!

“பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங். 51:16,17).

நொறுங்குண்ட இருதயத்தோடு கர்த்தரண்டை வரும்போது, கர்த்தருடைய உள்ளம் உருகுகிறது. அவர் அன்போடு உங்களை அரவணைக்க தம்முடைய கரத்தை நீட்டுகிறார். ஒருவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தோடு தேவசமுகத்தில் தன் பாவங்களுக்காகக் கதறி அழும்போது, கர்த்தருடைய பாவமன்னிப்பின் கரம் அவனைத் தொட்டு, கழுவி சுத்திகரிக்கிறது.

கர்த்தர் சொல்லுகிறார், “நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும்-, நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசா. 57:15).

சிந்தித்துப்பாருங்கள். ஒரு பொற்கட்டியை சுரங்கத்திலிருந்து பெயர்த்து எடுக்கிறார்கள். முதலில் அதை அடித்து நொறுக்குகிறார்கள். அதற்குப் பிறகு உலையிலே வைத்து காய்ச்சுகிறார்கள். நொறுக்கப்பட்ட அந்தக் கட்டி பசும்பொன்னாகி, பின்னர் அழகிய ஆபரணங்களாக மாறிவிடுகின்றன.

சோதனை உங்கள் இருதயத்தை நொறுக்கும்போது நீங்கள் பொன்னாக விளங்குவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். யோபு பக்தனின் வாழ்க்கையில் அவர் எத்தனை பாடுகளின் வழியாக கடந்துசென்று, நொறுக்கப்பட்ட அனுபவத்தில் இருந்தார்! அத்தனையும் அவருக்கு ஆசீர்வாதமாய் மாறியதல்லவா?

ரோஜா மலரைப் பாருங்கள். வாசனைத் தைலம் எடுப்பதற்காக அதைக் கசக்கிப் பிழிகிறார்கள். நீங்கள் கர்த்தருக்காக நற்கந்தமாக வாசனை வீசும்படி, கர்த்தர் நடத்தும் பாதைகளில் மகிழ்ச்சியோடு நடப்பீர்களா? நளத தைலம் குப்பியினுள் அடங்கியிருக்கிற வரையிலும் அது வாசனை வீசாது.

ஆனால் அது உடைக்கப்பட்டு கிறிஸ்துவின் பாதத்தில் ஊற்றப்பட்டபோதோ அந்த வீடு முழுவதும் பரிமள தைலத்தின் வாசனையால் பரிமளித்தது. அதைப்போலவே உங்களுடைய உள்ளம் உடைக்கப்பட்டு, கண்ணீரானது கிறிஸ்துவின் பாதத்தில் ஊற்றப்படும்போது, பரலோகம் அதை அறிந்துகொள்ளும். நொறுங்குண்ட உள்ளத்திலிருந்து ஏறெடுக்கப்படும் ஊக்கமான ஜெபமானது பரலோகத்தை நோக்கியே செல்லும்.

இயேசு தன் கைகளில் அப்பத்தை எடுத்தபோது அதைப் பிட்டார். பிட்கப்பட்டு உடைக்கப்பட்ட அந்த அப்பமானது கிறிஸ்து சிலுவையிலே நொறுக்கப்படுவதற்கு நிழலாட்டமாய் இருந்தது. சிலுவையிலே அவருடைய சரீரம் நார் நாராகக் கிழிக்கப்பட்டது. வேதம் சொல்லுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு-, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” (ஏசா. 53:5).

தேவபிள்ளைகளே, உங்களுக்காக நொறுக்கப்பட்ட தேவகுமாரனை நோக்கிப்பாருங்கள். அவர் உங்கள் உடைந்த உள்ளங்களின் வேதனையை அறிவார். உங்கள் கண்ணீரைப் புறக்கணித்துவிட்டு அவர் ஒருபோதும் கடந்துசெல்லமாட்டார். உங்கள் உடைந்த உள்ளமானது அவருடைய இருதயத்தை உருக்குகிறது. அவர் தம்முடைய பொற்கரத்தினாலே உங்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார்.

நினைவிற்கு:- “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங். 34:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.