No products in the cart.
ஜனவரி 16 – வெள்ளி சுத்த இருதயம்!
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங். 51:10).
தன் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது மன்னிப்பைக் கோருகிற தாவீது கர்த்தரிடத்தில், “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” என்று சொல்லி ஜெபித்தார். இந்த வார்த்தைகளை தியானித்துப் பாருங்கள்! சுத்த இருதயம் என்னும் வார்த்தை ஆங்கிலத்தில் Clean heart, pure heart என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது.
பல வருஷங்களாக ஒரு அறை மூடியே கிடந்தால் அந்த அறை முழுவதும் தூசியும், புழுதியும், அழுக்கும் நிறைந்து காணப்படும். அந்த அறையைப் பெருக்கி, கழுவி சுத்தப்படுத்தினால்தான் அதனுள் தங்கமுடியும்.
அதுபோலவே ஒரு மனுஷனுடைய இருதயம் பாவவாழ்க்கையினால் நிரம்பி, தேவனுக்கு இடம்கொடுக்காமல், பல ஆண்டுகள் அடைபட்டுக்கிடப்பதினாலே அதனுள் அசுத்தங்கள் நிரம்பியிருக்கக்கூடும். பாவஅறிக்கையின் மூலமாக அதை நாம் பெருக்கி, இயேசுவின் இரத்தத்தின்மூலமாக கழுவி, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அந்த அறையை மறுரூபமாக்கின பின்பு பரிசுத்த வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறோம்.
உங்கள் வாழ்க்கை சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்கவேண்டுமானால், முதலாவது உங்கள் இருதயம் சுத்திகரிக்கப்படவேண்டும். சுத்தமான இருதயத்தைப் பெறவேண்டுமென்றால், உங்களுடைய இருதயம் தேவனுடைய வார்த்தையால் நிரப்பப்படவேண்டும். கர்த்தருடைய வசனத்தின்படி ஜீவிக்க ஒருவன் தன்னை ஒப்புக்கொடுக்கும்போது அவனுக்கு உதவிசெய்ய ஆவியானவர் முன்வருகிறார். வேதம் சொல்லுகிறது, “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே” (சங். 119:9).
இரண்டாவது, பரிசுத்த ஜீவியத்திற்கு சுத்தமான கண்களும் அத்தியாவசியமானதாயிருக்கின்றன. “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1) என்று யோபு கேட்கிறார். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” (மத். 5:28). உங்கள் கண்கள் உங்கள் ஆத்துமாவைக் கறைப்படுத்த இடங்கொடாதிருங்கள்!
மூன்றாவது, பரிசுத்தமான வாழ்க்கைக்கு பரிசுத்தமான கைகள் வேண்டும். அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று 2 கொரி. 6:17-லே நாம் வாசிக்கிறோம். பரிசுத்தமான கைகளை உயர்த்தி எப்போதும் கர்த்தரைத் துதிப்பீர்களாக!
நான்காவதாக, பரிசுத்தமான வாழ்க்கைக்கு பரிசுத்தமான சரீரம் தேவை! வேதம் சொல்லுகிறது, “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள்” (ரோம. 12:1). சரீரம் வேசித்தனத்திற்குரியது அல்ல. அது கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாகக் காணப்படவேண்டும்.
ஆகவே வேசித்தனத்திற்கு விலகி ஓடி சரீரத்தைக் காத்துகொள்ளுங்கள் (1 கொரி. 6:18). “மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” (1 கொரி. 6:18). தேவபிள்ளைகளே, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தினைப் பாவம் ஆளாதிருப்பதாக.
நினைவிற்கு:- ‘அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவா. 3:3).
