Appam, Appam - Tamil

ஜனவரி 12 – சிறந்த சிலாக்கியம்!

“ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான். நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம் (ஆதி. 9:28,29).

நோவாவைப் பாருங்கள். தொளாயிரத்து ஐம்பது வருஷம் இந்த பூமியிலே அவர் உயிர் வாழ்ந்தார். அத்தனை ஆண்டுகளும் கர்த்தர் நோவாவுக்கு நல்ல சுகத்தையும், பெலனையும், ஆரோக்கியத்தையும் தந்து காத்துக்கொண்டார். பூமியில் மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லாத காலத்தில் கர்த்தர்தாமே நோவாவுக்கு பரம வைத்தியராக இருந்தார். நோவாவுக்குக் கிருபைபாராட்டின ஆண்டவர், நிச்சயமாய் உங்களுக்கும் நல்ல சுகம் பெலன் ஆரோக்கியம் ஆகியவற்றுடன் நீடிய ஆயுளையும் தந்தருளுவார்.

கர்த்தர் சொல்லுகிறார், “என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்” (நீதி. 9:11). ஆகவே நீங்கள் கர்த்தருக்காக வாழுங்கள். அவருடைய நாம மகிமைக்காக வாழுங்கள். தாவீது சொன்னார், “நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்” (சங். 118:17).

கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் ஜீவன் அற்புதமும், விசேஷமுமானது. ஆகாயத்துப் பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷமானவர்கள். காட்டுப்புஷ்பங்களைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷமானவர்கள். கர்த்தருடைய சாயலையும், ரூபத்தையும் உங்களுக்குத் தந்ததோடல்லாமல் இரட்சிப்பையும் கொடுத்திருக்கிறார். பூமியிலே வாழும்போதுமட்டும்தான் கர்த்தருடைய சுவிசேஷத்தை அறிவிக்கிற பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

“மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்” (சங். 115:17). கர்த்தரே உங்களை ஜீவனுள்ள தேசத்தில் வைத்து, அன்போடு பராமரித்துவருகிறார். உங்களைத் தேடிவந்து, உங்களுக்காகச் சிலுவை சுமந்து, ஜீவனைக் கொடுத்திருக்கிறார். உளையான சேற்றிலிருந்து உங்களைத் தூக்கியெடுத்து, கல்வாரி இரத்தத்தால் கழுவி, தம்முடைய பிள்ளை என்று அழைக்கப்படுகிற பாக்கியத்தைத் தந்திருக்கிறார். அதோடல்லாமல் இராஜாவாக, ஆசாரியனாக அபிஷேகமும் பண்ணியிருக்கிறார்.

ஆகவே என்ன பிரச்சனை வந்தாலும் மனம்சோர்ந்துபோய், தோல்வியின் வார்த்தைகளைப் பேசாதிருங்கள். “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்” (சங். 91:15,16) என்று கர்த்தர் வாக்குப்பண்ணியிருக்கிறார்.

“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” (நீதி. 18:21). “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்” (நீதி. 3:1,2).

தேவபிள்ளைகளே, கர்த்தர் எவ்வளவு காலம் இந்த பூமியிலே உங்களைத் தங்கவைக்க சித்தங்கொள்ளுகிறாரோ, அவ்வளவு காலம் பூரணமாய் வாழ்ந்துவிடுங்கள். அவருடைய சித்தத்தின்படி செய்யுங்கள். கர்த்தரைப் பிரியப்படுத்தி ஊழியம் செய்யுங்கள்.

நினைவிற்கு:- “உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது” (சங். 103:4,5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.