Appam, Appam - Tamil

ஜனவரி 06 – இழந்துபோன மகிழ்ச்சி

“நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” (சங். 90:15).

“எங்களை மகிழ்ச்சியாக்கும்; எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்பதே ஆயிரமாயிரமான மக்களின் இருதயக் குமுறலாய் இருக்கிறது. துன்பத்திலும், துக்கத்திலும், இருளிலும் வாடுகிறவர்கள் மகிழ்ச்சியின் ஒளிக்காக ஏங்கத்தானே செய்வார்கள்.

அன்று தேவனுடைய மனுஷனாகிய மோசே கர்த்தரிடத்தில் இருதயத்தை ஊற்றி ஜெபித்த ஜெபம்தான் ‘எங்களை மகிழ்ச்சியாக்கும்’ என்பதாகும். சாதாரணமாக மகிழ்ச்சியாக்கும் என்று அவர் சொல்லாமல் “நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்குத் தக்கதாக எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்று கேட்டு ஜெபித்தார்.

“துன்பத்தைக் கண்ட வருஷங்கள்” எல்லாம் அவருடைய மனக்கண்களுக்கு முன்பாக வருகிறது. ஏறக்குறைய 400 வருஷங்கள் அவர்கள் எகிப்திலே துன்பத்தைக் கண்டார்கள். அடிமைகளாய் வாழ்ந்தார்கள். கட்டாயக் கூலிவேலை செய்தார்கள். செங்கலை அறுத்து, செங்கலைச் சுட்டு, செங்கலைச் சுமந்து வாழ்நாளெல்லாம் அவர்கள் தொய்ந்துபோனார்கள். செங்கலை சுடுவதற்கு போதுமான வைக்கோல்கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆளோட்டிகள் அவர்களை சவுக்குகளினால் அடித்து சிறுமைப்படுத்தினார்கள். அவர்கள் ஜீவன் அவர்களுக்கு கசப்பாயிற்று.

அவர்கள் பார்வோனுடைய அடிமைத்தனத்தைவிட்டு வெளியே வந்த பிறகுகூட அவர்களுடைய துன்பங்கள் முழுவதுமாய் நீங்கவில்லை. வனாந்திரமாகிய பாலைவனத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தார்கள். ஏதோ ஓரிரு மாதங்களில் முடிகின்ற நடை அல்ல அது. நாற்பது வருடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டியதாயிற்று. யாருமே பாலைவனத்திலேயேயிருக்க விரும்பமாட்டார்கள் அல்லவா? முன்னே பாலும் தேனும் ஓடுகிற கானான் இருந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் உடனே அதை சுதந்தரித்துக்கொள்ள முடியாதபடி ஏராளமான தடைகள் எழுந்தன.

மோசே மனதுருகி ஜெபிக்கிறார், ‘தேவனே, எங்களை மகிழ்ச்சியாக்கும்; நாங்கள் சிறுமைப்பட்ட நாட்களுக்கும், வேதனை அனுபவித்த வருஷங்களுக்கும் தக்கதாக எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்று மன்றாடினார். நீங்களும்கூட ஒருவேளை துன்பப்பட்டு மனம் நொந்து துக்கத்தோடு நடந்துகொண்டிருக்கலாம். பல ஆண்டுகளாக பெருங்காற்றினாலும், சுழற்காற்றினாலும் அடிக்கப்பட்டு வேதனையோடு நடந்துகொண்டிருக்கலாம். வீசுகிற புயல்காற்றையும், கொந்தளிக்கிற கடலையும் பார்த்து அதைரியப்பட்டுக்கொண்டிருக்கலாம். இன்று மோசேயோடுகூட சேர்ந்து ‘கர்த்தாவே எங்களை மகிழ்ச்சியாக்கும்’ என்று கதறுவீர்களேயானால் சூழ்நிலையைக் கர்த்தர் நிச்சயமாய் மாறச்செய்வார்.

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பாடல்வரி உண்டு. “தாங்கமுடியாத குளிர் காலத்தினால் வதங்கிப்போனாயோ? குளிர்காலம் எப்போதும் நீடித்திருப்பதில்லை. வசந்தகாலம் சமீபமாய் இருக்கிறது என்பதை அறியாயோ?” என்பதே அது. பள்ளிக்கூடத்தில் படித்து பரீட்சையில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு ‘ஏப்ரலில் தோற்றுப்போனால் என்ன? செப்டம்பரில் வெற்றி பெறுவாய்’ என்று ஆறுதல் சொல்லுவார்கள். அதைப்போலவே வனாந்தர வாழ்க்கை நீடித்திருப்பதில்லை. கானான் மிக அருகிலே உள்ளது என்பதை விசுவாசத்தோடு பற்றிக்கொள்ளுங்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் நிச்சயமாகவே உங்களை மகிழ்ச்சியாக்குவார். உங்களுடைய கண்ணீர் ஆனந்தக் களிப்பாய் மாறும். நீங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்குத் தக்கதாக மகிழ்ச்சியான வருஷங்களைக் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவா. 15:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.