No products in the cart.
ஜனவரி 03 – புதிய போஜன பலி!
“கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்” (லேவி. 23:16).
புதிய ஆண்டிலே, கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்கும்பொழுது நீங்கள் ஒவ்வொரு நாளும் அவருக்கு புதிய பலிகளைச் செலுத்தவேண்டுமென்று அவர் விரும்புகிறார். பழைய ஏற்பாட்டிலே இஸ்ரவேல் ஜனங்களுக்கு அனுதினமும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகன பலிகளைக் குறித்து கர்த்தர் எண். 29:6 லே தெளிவாக ஆலோசனை கொடுத்திருக்கிறார்.
நீங்கள் தினந்தோறும் துதிக்க வேண்டும் (சங். 68:19). தினந்தோறும் வேதம் வாசிக்க வேண்டும் (அப். 17:11). தினந்தோறும் ஜெபிக்க வேண்டும் (சங். 88:9). தினந்தோறும் கர்த்தருடைய பாதத்தில் காத்திருக்க வேண்டும் (நீதி. 8:34). மாத்திரமல்ல, ஒவ்வொரு நாளும் நீங்கள் கர்த்தருக்கு பலிசெலுத்த வேண்டும் (எண். 29:6).
பழைய ஏற்பாட்டுக் காலத்தைப்போல நீங்கள் பலவிதமான பலிகளை ஆலயத்திற்குக் கொண்டுவந்து, ஆசாரியன் முன்னிலையில் நிறுத்தி, பலியின் பொருளை பலிபீடத்தின் மேல் கிடத்தி பலி செலுத்தவேண்டியதில்லை. கல்வாரி சிலுவை பலிக்குப் பின்பு அந்த முறைகள் யாவும் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டன.
புதிய ஏற்பாட்டிலே, நீங்கள் அனுதினமும் செலுத்த வேண்டிய பலிகள் யாவை? முதலில் உங்களையே ஜீவ பலியாக கர்த்தருடைய சந்நிதானத்தில் சமர்ப்பித்துவிடவேண்டும். அப். பவுல், “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்” என்று எழுதுகிறார் (ரோமர் 12:1).
ஒவ்வொருநாளும் உங்கள் அவயவங்கள் ஒவ்வொன்றையும் விசுவாசத்தோடே பலிபீடத்தின்மேல் வைத்து ஜெபியுங்கள். கர்த்தருக்கென்று பரிசுத்தமுள்ள ஜீவபலியாக கண்களையும், கைகளையும், கால்களையும், நினைவுகளையும், சிந்தனைகளையும் அர்ப்பணித்துவிடுங்கள்.
அப். பவுல், “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” என்று அறிக்கை பண்ணுகிறார் (கலா. 2:20).
அனுதின பலி என்பது அனுதினமும் ஒப்புக்கொடுத்தல் ஆகும். அனுதினமும் கர்த்தருடைய சித்தத்திற்கு அர்ப்பணித்துவிடுதலாகும். அனுதினமும் உங்களுடைய சுயம் சாகவேண்டும். தன்னலம் மறையவேண்டும். பாவ சுபாவங்கள் அழிக்கப்படவேண்டும்.
அப். பவுல், “நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்” (1 கொரி. 15:31) என்று எழுதுகிறார்.
தேவபிள்ளைகளே, அனுதினமும் உங்களைப் பலிபீடத்தில் சமர்ப்பிப்பதுடன், அனுதினமும் சிலுவையிலே உங்களுக்காக பலியான கிறிஸ்துவினுடைய அன்பை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய சுபாவங்களுக்கு பங்காளிகளாகுங்கள். கிறிஸ்து அனுதினமும் உங்களில் ஜீவிக்கட்டும்.
நினைவிற்கு:- “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக். 9:23).