No products in the cart.
ஜனவரி 03 – இரட்சிப்பு என்னும் ஆசீர்வாதம்!
“அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்” (1பேது. 3:20).
கர்த்தர் நோவாவுக்குக் கொடுத்த ஒரு பெரிய ஆசீர்வாதம் அவரது முழு குடும்பத்திற்கும் கொடுத்த இரட்சிப்பு ஆகும். எட்டுபேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள் என்று தமிழ் வேதாகமம் சொல்லுகிறது. ஆனால் மற்ற மொழிபெயர்ப்புகள் எட்டுபேர்மாத்திரம் இரட்சிக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடுகின்றன. நோவா செய்த பேழை, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பையும், இரட்சிப்பையும் கொண்டுவந்தது.
வேதம் சொல்லுகிறது, “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்” (எபி. 11:7).
நோவா ஒருபக்கம் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். மறுபக்கம் பேழையைக் கட்டிக்கொண்டிருந்தார். அதேநேரம் குடும்பத்தைப்பற்றிய பாரமும், பொறுப்புமுள்ளவராய் இருந்தார். தேவபிள்ளைகளே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தைக்குறித்த பொறுப்பும், கரிசனையும் அக்கறையும் மிக மிகத் தேவை. வேதம் சொல்லுகிறது, “நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு” (சங். 118:15).
நாம் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படவேண்டுமென்றும், சத்தியத்தை அறிகிற அறிவைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றும் கர்த்தர் விரும்புகிறார். அவர் ஏற்கெனவே கல்வாரி சிலுவையில் இரட்சிப்பை உருவாக்கி வைத்திருக்கிறார். ஒரு இரட்சகராய் நமக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார். பாவமன்னிப்புக்கென்று தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தியிருக்கிறார். நம்முடைய கடமை என்ன? நம்முடைய குடும்பத்தாரும் அதை அன்போடு ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும். யோசுவா சொன்னார், “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசு. 24:15).
ஒரு குடும்பத்தில் ஒருவர் இரட்சிக்கப்பட்டாலும், முழு குடும்பத்தையும் இரட்சிப்பேன் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம் ஆகும். சோதோம் கொமோரா அழிக்கப்படுவதற்கு முன்பாக, கர்த்தர் லோத்தின் முழு குடும்பத்தையும் வெளியே கொண்டுவந்தார். மட்டுமல்ல, லோத்தின் குமாரத்திகளை விவாகம் செய்யவிருந்த மருமக்கள்மாருக்கும்கூட, கர்த்தர் இந்த இரட்சிப்பின் கிருபையைப் பாராட்ட சித்தமாய் இருந்தார். ஆனால் லோத்தின் மருமக்கள்மாரோ அந்த கிருபையை அசட்டைபண்ணினார்கள்.
ராகாப் என்னும் வேசி ஆண்டவர்மேல் அன்பு வைத்து, தேவ ஜனங்களை ஏற்றுக்கொண்டு, தன் வீட்டிலே சிவப்பு நூலைக் கட்டியிருந்தபோது, அவளும் அவள் வீட்டார் அனைவரும் பாதுகாக்கப்பட்டார்கள். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31) என்பதே கர்த்தருடைய வாக்குத்தத்தம் ஆகும்.
தேவபிள்ளைகளே, நீங்கள் குடும்பமாய் கர்த்தருடைய இராஜ்யத்திலே காணப்படுவீர்களாக!
நினைவிற்கு:- “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” (அப். 2:39).
