No products in the cart.
ஜனவரி 02 – புதிய தானியம்!
“புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்” (லேவி. 26:10).
புதிய ஆண்டின் புதிய ஆசீர்வாதங்களிலே புதிய தானியமும் ஒன்று. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதித்தபொழுது அவர்கள் நடாத புதிய வயல்களை அவர்களுக்குக் கொடுத்தார். புதிய விளைச்சலைக் கட்டளையிட்டார். ஒவ்வொரு புதிய அறுவடையிலும் முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் கொடுக்கும்படி கிருபை செய்தார்.
‘தானியம்’ என்பது, அக்கால மக்களுக்கு வருமானமாயும், அவர்களுடைய முக்கிய உணவாயும் இருந்தது. இன்றைக்கு உங்களுடைய வருமானத்தை பணத்திலே கணக்கிடுகிறீர்கள். எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். ஆனால் பழங்காலத்திலே எவ்வளவு தானியம் விளைகிறது என்று கேட்பார்கள். தானியமே அவர்கள் ஆஸ்தியும், சொத்துமாக இருந்தது.
ஈசாக்கு தன் குமாரனாகிய யாக்கோபை ஆசீர்வதித்தபொழுது, “தேவன் உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும், திராட்சரசத்தையும் தந்தருளுவாராக” என்று சொன்னார் (ஆதி. 27:28). பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்பொழுது ‘கர்த்தர் உனக்கு மிகுந்த தானியத்தை தருவாராக’ என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார்கள்.
அதுபோல மோசே இஸ்ரவேல் ஜனத்தை ஆசீர்வதிக்கும்பொழுது திரளான தானியத்தை வாக்குப்பண்ணி அவர்களை ஆசீர்வதித்தார் (எண். 18:12). “உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனியாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும் உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டு மந்தைகளையும் ஆசீர்வதிப்பார்” (உபா. 7:13) என்று சொன்னார்.
இந்த புதிய ஆண்டிலே கர்த்தர் உங்கள் வருமானத்தை ஆசீர்வதிக்க விரும்புகிறார். கையின் பிரயாசங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்களை ஆசீர்வதிப்பார். ஆம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும்பொழுதுதான் உங்கள் மூலமாக கர்த்தருடைய ஊழியங்களும் ஆசீர்வதிக்கப்படும்.
வேதம் சொல்லுகிறது, “நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு சொல்லியபடியே உங்கள் ஆசீர்வதிப்பாராக” (உபா. 1:11).
தானியம் என்பது, ஆவிக்குரிய விதத்திலே வேத வசனங்களுக்கு அடையாளமாக இருக்கிறது. இதுவே வானத்து தானியம், பரலோகத்தின் மன்னா. உலகப் பிரகாரமான தானியம் சரீரத்தைத்தான் பெலப்படுத்துகிறது. ஆனால் ஆன்மீக மன்னாவாகிய தானியமோ, உங்கள் ஆத்துமாவை பெலப்படுத்துகிறது. இந்த தானியம் வாலிபரை வளர்க்கும் என்று சகரி. 9:17 லே வாசிக்கிறோம்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் வருமானத்தை ஆசீர்வதிக்கும்படி எப்பொழுதும் கர்த்தருக்கு முக்கியத்தும் கொடுங்கள். வேத வாசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கை செழிப்பாய் மாறும்.
நினைவிற்கு:- “நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக” (உபா. 33:16)