No products in the cart.
ஜனவரி 02 – நோவாவின் பேழை!
“அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்” (ஆதி. 7:13).
நீங்கள் புதிய வருடத்தில் கர்த்தருடைய கிருபைக்குள் பிரவேசித்திருக்கிறீர்கள். கர்த்தருடைய அளவற்ற அன்புக்குள்ளே, தயவுக்குள்ளே, காருணியத்துக்குள்ளே பிரவேசித்திருக்கிறீர்கள். கிறிஸ்துவுக்குள் வாழும் உங்களை கர்த்தர் நிச்சயமாகவே கண்மணிபோல பாதுகாத்து உயர்த்தியருளுவார்.
மோசே பிறந்தபோது, எகிப்தின் பார்வோனுடைய கொடுமையான சட்டங்களுக்குத் தன் மகனைத் தப்புவிக்கும்படி, அவனது தாய் ஒரு சிறு நாணல் பேழையைச் செய்தாள். அதில் குழந்தையாய் இருந்த மோசேக்குமட்டுமே இடம் கிடைத்தது. நோவா செய்த பேழையிலோ, நோவாவின் குடும்பத்தார் அனைவருக்கும் இடம் கிடைத்தது. நோவாவும் அவருடைய மனைவியும், அவருடைய மகனாகிய சேமும் அவருடைய மனைவியும், காமும் அவருடைய மனைவியும், யாப்பேத்தும் அவருடைய மனைவியும் பேழைக்குள்ளே பாதுகாக்கப்பட்டார்கள்.
இன்றைக்கு நமக்கு முன்பாக ஒரு பேழை இருக்கிறது. அது இயேசு என்கிற ஜீவனுள்ள பேழை. அதிலே ஒருவருக்கோ, எட்டு பேருக்கோ மட்டுமல்ல, அவருடைய நாமத்தை விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொள்ளுகிற அத்தனைபேருக்கும் இடம் உண்டு. இன்றைக்கும் அந்த பேழையின் வாசல் திறந்திருக்கிறது. நம்மை பேழையில் கூட்டிச்சேர்த்துக்கொள்ளும்படி கிறிஸ்து ஆவலுள்ளவராய் இருக்கிறார்.
நோவாவின் குடும்பத்தார் அந்த பேழைக்குள் பிரவேசித்தார்கள். தேவபிள்ளைகளே, நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் எங்கே இருக்கிறீர்கள்? பேழைக்குள் இருக்கிறீர்களா அல்லது பேழைக்கு வெளியே நிற்கிறீர்களா? உன்னதமானவரின் மறைவில் இருக்கிறீர்களா அல்லது வானத்தின் கீழெங்கும் திறந்துவிடப்பட்ட நிலைமையில் இருக்கிறீர்களா? சர்வ வல்லவருடைய நிழலில் தங்குகிறீர்களா அல்லது மாயையான உலகச் சிற்றின்ப நிழலில் தங்குகிறீர்களா?
இன்றைக்கு உலகத்தின் முடிவுக்கு வந்திருக்கிறோம். தனிப்பட்ட மனிதனுக்கும் முடிவு உண்டு. தேசத்திற்கும், அரசாங்கத்திற்கும் முடிவு உண்டு. உலகத்திற்கும் ஒரு முடிவு உண்டு. சரித்திரத்தின் அடிச்சுவடுகளைப் புரட்டிப்பாருங்கள். அங்கே நாகரீகங்கள் எழும்பின. நகரங்கள் எழும்பின. அநேக சாம்ராஜ்யங்கள் தோன்றின. அநேக சக்கரவர்த்திகள், பேரரசர்கள் எழும்பினார்கள். கர்த்தர் அவர்களுக்கும் முடிவை உண்டாக்கினார்.
நாம் வந்திருக்கிற காலம் உலகத்தின் முடிவுகாலம். பேழைக்குள் பாதுகாக்கப்படவேண்டிய காலம். நீங்கள் குடும்பமாய் அதற்குள் உட்பிரவேசிக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். நோவாவின் காலத்திலே உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழித்த ஆண்டவர், இந்த உலகத்தை அக்கினிக்கு இரையாக வைத்திருக்கிறார்.
தேவபிள்ளைகளே, இந்த புதிய ஆண்டிலே, கிறிஸ்துவாகிய பேழைக்குள்ளே நீங்கள் இருக்கிறீர்களா என்பதை மறுபடியும் ஒருமுறை சீர்தூக்கிப்பார்த்து குறைபாடுகள் தெரியுமானால் உடனடியாக சீர்செய்துகொள்ள முன்வாருங்கள்.
நினைவிற்கு:- “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” (1 பேது. 4:7).
