No products in the cart.
ஜனவரி 01 – புத்தாண்டு!
“இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார்” (ஆகாய் 2:19).
அன்றன்றுள்ள அப்பம் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் என் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களை மிகுந்த அன்போடு தெரிவித்துக்கொள்ளுகிறேன். கடந்த வருடமெல்லாம் நம்மை நல்ல சுகத்தோடும், பெலத்தோடும் காத்து புத்தாண்டைக் காணச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.
புத்தாண்டு ஆரம்பிக்கும்போது, கர்த்தருடைய பிள்ளைகள் ஊழியரிடத்திலும், போதகரிடத்திலும், வீட்டிலுள்ள பெரியவர்களிடத்திலும் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவது வழக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்குத் தேவை. ஆகவே தேவ சமுகத்திலே முழங்கால்படியிட்டு, “ஆண்டவரே, இந்தப் புதிய ஆண்டின் முதல் நாளிலே நீர் என்னை ஆசீர்வதியும். இந்த வருடம் முழுவதிலும் உம்முடைய கரமும், பிரசன்னமும் என்னோடுகூட இருக்கட்டும்” என்று கேளுங்கள்.
இம்மைக்கும், மறுமைக்கும், நித்தியத்திற்குமுரிய எல்லா ஆசீர்வாதங்களும் கர்த்தரிடத்திலிருந்துதான் இறங்கி வருகின்றன. அவர்தான் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றுக்காரணர். அவர்தான் உங்களுக்கு ஒத்தாசை செய்யும் பர்வதம். அவர்தான் தலைமுறை தலைமுறையாக உங்களை ஆசீர்வதிக்கிறவர்.
ஆதாம் ஏவாளை கர்த்தர் சிருஷ்டித்தபோது, அவர்கள் கேட்காமலேயே தேவன் மனதுருகி அவர்களை ஆசீர்வதித்து ‘பலுகிப் பெருகுங்கள், பூமியை நிரப்புங்கள், அதை ஆண்டுகொள்ளுங்கள்’ என்று சொன்னார் (ஆதி. 1:28). ஆம், தேவனுடைய பிள்ளைகள் குறுகிப்போகக்கூடாது. பலுகவேண்டும், பெருகவேண்டும். தேவனுடைய ஆசீர்வாதத்தால் உலகத்தை நிரப்பி ராஜரீக ஆளுகை பெற்று ஆண்டுகொள்ள வேண்டும்.
நோவாவைக் கர்த்தர் கண்டார். தன் காலத்திலே வாழ்ந்த எல்லா ஜனங்களைப் பார்க்கிலும் நோவா உத்தமனும், நீதிமானுமாய் இருந்தபடியினால் மகிழ்ச்சியுடன் கர்த்தர் நோவாவையும், அவருடைய குமாரரையும் ஆசீர்வதித்தார் (ஆதி. 9:1). ஆபிரகாமை கர்த்தர் ஆசீர்வதிக்கும்போது மற்ற எல்லாரைப் பார்க்கிலும் மிக அதிகமாய் ஆசீர்வதித்தார். தன்னுடைய சிநேகிதன் என்று அழைத்ததோடல்லாமல் அவரை மேன்மைப்படுத்தி ஆசீர்வதித்தார்.
“நான்… உன்னை ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்; பூமியின் வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதி. 12:2,3) என்றார். கர்த்தருடைய அடுக்கடுக்கான ஆசீர்வாதங்கள் எத்தனை மேன்மையானவை!
மட்டுமல்ல, ஆபிரகாம் தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று துயரப்பட்டபோது, கர்த்தருடைய உள்ளம் உருகிப்போயிற்று. ஆபிராம் என்ற பெயரை மாற்றி ஆபிரகாம் என்று அழைத்தார். ஆபிரகாம் என்றால், அநேக ஜாதிகளுக்கு தகப்பன் என்று அர்த்தம். கடற்கரை மணலைப் போல உனக்குச் சந்ததியை ஏற்படுத்துவேன் என்று ஆசீர்வதித்தார். பூமியின் தூளைப்போல உன் சந்ததியை ஆசீர்வதிப்பேன் என்றார்.
அதுமட்டுமல்லாமல், வானத்தின் நட்சத்திரங்களை எல்லாம் காண்பித்து ஆபிரகாமே, “வானத்தின் நட்சத்திரங்களை உன்னால் எண்ணக் கூடுமோ? உன் சந்ததியை அவ்வளவாய் ஆசீர்வதிப்பேன்” என்று உளமார ஆசீர்வதித்தார். தேவபிள்ளைகளே, நீங்கள் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படுவீர்கள். விசுவாசத்துடனிருங்கள்.
நினைவிற்கு:- “விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்” (கலா. 3:9).