Appam, Appam - Tamil

செப்டம்பர் 27 – ஆச்சரியமான புதிய மனிதன்!

“அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்” (1 சாமு.10:6).

பழைய ஏற்பாட்டில், சவுலின் எண்ணமெல்லாம் காணாமற்போன தன் தகப்பனுடைய கழுதையைத் தேடுவதைப்பற்றியே இருந்ததைப் பார்க்கிறோம். ஆனால் கர்த்தரோ ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் சவுலை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ண நோக்கம்கொண்டிருந்தார்.

‘ஞானதிஷ்டிக்காரன்’ என்று அழைக்கப்பட்ட சாமுவேலினிடத்தில் தன் தகப்பனின் கழுதைகள் எங்கே போயின என்று விசாரிக்கும்படி சவுலும், அவனுடைய வேலைக்காரனும் அந்த தேவ மனுஷன் இருந்த பட்டணத்திற்குப் போனார்கள்.

வேதம் சொல்லுகிறது, “அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா?” என்று சொன்னார் (1 சாமு. 10:1).

என்ன ஆச்சரியம் பாருங்கள். சவுல் தேவனுடைய அபிஷேகத்தையோ, வல்லமையையோ அல்லது எந்த ஆவிக்குரிய அனுபவத்தையோ பெற்றுக்கொள்ள அங்கே வரவில்லை. கழுதைதான் அவருக்கு முக்கியமானதாக இருந்தது. கர்த்தரோ ஆச்சரியமான விதத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை அவர் வாழ்க்கையில் கட்டளையிட்டார்.

அவருடைய சிரசின்மேல் அபிஷேக தைலம் ஊற்றப்பட்டது. ஆவியானவர் அவர்மேல் பலமாய் இறங்கினார். அப்பொழுது அவர் தீர்க்கதரிசனம் உரைத்து புதிய மனுஷனாய் மாறினார். அது அவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாய் அமைந்தது. கர்த்தர் இன்று உங்களுக்கு ஒரு ஆச்சரியமான திருப்புமுனையைக் கொடுக்க சித்தமானவராயிருக்கிறார்.

கர்த்தர் சொல்லுகிறார், “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல” (ஏசா. 55:8) “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசா. 55:9). தேவபிள்ளைகளே, நீங்கள் நினைக்கிறதற்கும் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் மிக அதிகமாய் உங்களை ஆசீர்வதித்து உயர்த்த கர்த்தர் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

கர்த்தருடைய அபிஷேகம் உங்களைப் புதிய மனுஷனாக மாற்றிவிடும். நீங்கள் கர்த்தருக்காக ஒரு எலியாவாக, எலிசாவாக, பேதுருவாக, யோவானாக, பவுலாக மாறுவீர்கள். இந்தத் தலைமுறையினரை கிறிஸ்துவுக்குள்ளே கொண்டுவரும் வல்லமையான பாத்திரம் நீங்கள்தான். உலகத்தை அசைப்பதற்காக கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறாரே.

கர்த்தருடைய அபிஷேகம் உங்கள்மேல் இறங்கிவரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், கர்த்தருக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் (அப். 1:8).

தேவபிள்ளைகளே, அந்த அபிஷேகம் இறங்கிவரும்போது பரலோக வல்லமையை அளவில்லாமல் உங்களுக்குள் கொண்டுவரும். அப்பொழுது நுகத்தடிகள் முறிந்து விழும், சிறையிருப்பு மாறும். நீங்கள் புதிய மனுஷனாய் மாற்றப்படுவீர்கள்.

நினைவிற்கு:- “இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை” (ஏசா. 64:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.