Appam, Appam - Tamil

ஏப்ரல் 28 – தாயார் யார்? சகோதரர் யார்?

என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே (மத். 12:48,49) என்றார்.

இயேசு இந்த பூமியிலே இருந்தபோது, ஏராளமானபேர், அவர் யார் என்று அறிய ஆசைப்பட்டார்கள். உமக்கு அதிகாரத்தைக் கொடுத்தவர் யார் என்று யூதர்களும், பரிசேயர்களும் கேட்டார்கள். ஆனால், கிறிஸ்துவோ, “என் தாயார் யார்? என் சகோதரர் யார்?” என்று இரண்டுமுறை அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

அப். பவுல், தன்னையும்கூட கர்த்தருடைய தாயார்களில் ஒருவராக கருதினார். ஆகவே கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில், “என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகிறேன்” என்று எழுதினார்.

அப். பவுல் கர்ப்பவேதனைப்பட்டதால்தான் ஏராளமான சபைகளை ஸ்தாபிக்க அவரால் முடிந்தது. அவர் ரோமாபுரி சிறையிலிருக்கும்போதுகூட, ஆவிக்குரிய தாயாராய் விளங்கினதினால் பிலோமோனுக்கு எழுதும்போது, “கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்” (பிலே. 1:10) என்று குறிப்பிட்டார். நீங்களும், கர்ப்பவேதனையோடு ஜெபிக்கும்போதும், ஆத்துமாக்களுக்காக பாரமெடுக்கும்போதும் கர்த்தருடைய தாயாராக விளங்குவீர்கள். அப்படித்தான் எரேமியா தீர்க்கதரிசியும்கூட, ஆத்துமாக்களுக்கு ஒரு தாயாக விளங்கினார் (எரே. 4:31).

ஒரு இஸ்லாமிய சகோதரன், “இறைவன் யார்? தகப்பனும் தாயும் இல்லாதவராக, சகோதர, சகோதரிகள் இல்லாதவராக, மனுஷர் உண்டாக்கப்படுவதற்கு முன்பாகவே இருக்கிறவராகவே இருக்கிறவர். அப்படியிருக்க இயேசு இறைவனாயிருந்தால், எப்படி அவருக்கு தாயாக மரியாள் இருக்கமுடியும்? தாயாக மரியாள் இருப்பாளென்றால், தகப்பன் பரிசுத்த ஆவியானவரா?” என்று பல கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

நான் அவரிடத்தில், ‘உலகங்கள் உருவாக்கப்படும்முன்னே இயேசு இருந்தார்’ என்று சொன்னேன். பூமியிலே இயேசுவின் தாயாக இருந்த மரியாளுக்குமுன்பாகவே அவர் இருந்தார் என்பதையும், ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்பாகவே நான் இருக்கிறேன் என்று அவர் சொன்னார் (யோவா. 8:58) என்பதையும் எடுத்துச்சொன்னேன்.

அநாதியாய் என்றென்றைக்கும் இருக்கிற இறைவன், பூமியிலே பிறப்பதற்கு தன்னுடைய கர்ப்பத்தைக் கொடுத்து உதவியவர்தான் மரியாள். இயேசு வளருவதற்கு வீட்டைக் கொடுத்து உதவினவர்தான் யோசேப்பு. ஆகவே இயேசு கிறிஸ்து ஒரு முறைகூட மரியாளை அம்மா என்றோ, தாயே என்றோ அழைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் ஸ்திரீயே என்றுதான் அழைத்தார் (யோவா. 2:4).

இயேசு தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: “இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்” (மத். 12:49,50) என்பதையெல்லாம் அவருக்கு எடுத்துச்சொன்னேன். தேவபிள்ளைகளே, பிதாவின் சித்தத்தின்படி நீங்கள் செய்வீர்களென்றால், நீங்கள் கிறிஸ்துவுக்கு தாயாக, சகோதர சகோதரிகளாக விளங்குவீர்கள்.

நினைவிற்கு:- “இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் (எபி. 2:11,12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.