No products in the cart.
ஏப்ரல் 26 – அறிந்திருக்கிறார்!
“அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (யாத். 3:7).
கர்த்தர் நம்மை அறிந்திருக்கிறார். நாம் படுகிற வேதனைகளையும் துக்கங்களையும் அறிந்திருக்கிறார். நீங்கள் என்ன நிலைமையில் இருக்கிறீர்களோ அவர் அதை அப்படியே புரிந்துகொண்டிருக்கிறார். நாகூம் தீர்க்கதரிசி சொல்லுகிறார்: “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்” (நாகூ. 1:7).
அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலே வேதனைப்பட்டார்கள். அவர்கள் நானூற்று முப்பது வருஷம் அங்கே அடிமைகளாய் இருக்கவேண்டிய நிலைமை வந்தது. கானான் தேசத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அவர்கள் அத்தனை ஆண்டுகளும் பொறுமையாய் இருக்கவேண்டியது அவசியமாயிருந்தது.
அவர்கள் பொறுமையாய் இருந்தால்தான் எகிப்தியரின் மற்றும் கானானிலே உள்ள ஜனங்களாகிய எமோரியர் ஆகியோரின் அக்கிரமம் பூரணமாகும். கர்த்தர் அந்த தேசத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுப்பதற்கு ஏதுவாயிருக்கும். ஆனால் இஸ்ரவேல் புத்திரர் அதை அறிந்துகொள்ளாமல் எகிப்திலே ஆளோட்டிகளின் நிமித்தம் வேதனைப்பட்டு கூக்குரலிட்டார்கள். உபத்திரவம் அடைந்து தங்கள் முற்பிதாக்களின் தேவன் எங்கே என்று கண்ணீர் சிந்தினார்கள்.
நம் அருமை ஆண்டவர் அவர்களுடைய துக்கங்களையும், துயரங்களையும், கூக்குரலையும், கண்ணீரையும் அறிந்திருந்தார். ஆகவே மோசேயைப் பார்த்து, ‘அவர்கள் படுகிற வேதனையை அறிந்திருக்கிறேன்’ என்று அன்போடு சொன்னார்.
கர்த்தர் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் உங்களுடைய வேலைஸ்தலத்தில் படுகிற உபத்திரவத்தை அவர் அறிவார். அல்லது உங்கள் வீட்டிலே உள்ள உபத்திரவங்களையும் அவர் உணருகிறார். உங்களுடைய ஆகாரத்தோடுகூட கண்ணீரைக் கலந்து நீங்கள் உண்கிறதைக் காண்கிறார். உங்களுக்கு விரோதமாய் தவறான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படுகிறதையும் அவர் அறிந்திருக்கிறார்.
கர்த்தர் உங்களை விடுவிக்கிற நேரம் வந்திருக்கிறது. அன்றைக்கு இஸ்ரவேலரை மோசேயின்மூலமாக நடத்தின ஆண்டவர் இன்று உங்களை அற்புதமாய் நடத்துவார். இனி நீங்கள் கர்த்தரைப் பின்பற்றி மேன்மையான இடத்திற்கு உயர்த்தப்படுவீர்கள்.
உங்களுடைய தாய் உங்களுடைய உண்மையான நிலவரத்தை புரிந்துகொள்ளாமல் இருந்தாலும், இந்த உலகத்திலே எல்லோருமே உங்களைத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தாலும் கர்த்தர் உங்களை அறிந்திருக்கிறார் என்பதை நிச்சயமாகவே அறிந்துகொள்ளுங்கள். அவர் உங்கள்மேல் கரிசனையுள்ளவராக இருக்கிறார்.
உங்களை தாயின் வயிற்றில் உருவாக்கியவரும், உங்களுக்காக சிலுவையிலே இரத்தக்கிரயம் செலுத்தினவருமான கர்த்தர், நிச்சயமாகவே உங்களை எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் மீட்டு உயர்த்தியருளுவார். தேவபிள்ளைகளே, அவர் உங்களை அறிந்திருக்கிறவர்.
நினைவிற்கு:- “கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது” (2 தீமோ. 2:19).
