No products in the cart.
ஏப்ரல் 25 – நீதியும், பாவமும்!
“நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி” (நீதி. 14:34).
கர்த்தர் ஒரு பக்கம் நீதிக்கு அழைக்கிறார். மறுபக்கமோ சாத்தான் பாவத்துக்கு அழைக்கிறான். நாம் நீதியின் பாதையில் செல்லும்போது கர்த்தரால் உயர்த்தப்படுவோம், மேன்மைப்படுத்தப்படுவோம், மகிமைப்படுத்தப்படுவோம். ஆனால் பாவத்தின் பாதையிலே சென்றால் இகழ்ச்சிக்கும் நிந்தனைக்கும் ஆளாவோம். பாதாளம் வாயைத் திறந்துகொண்டிருக்கும்.
பறவைகளைப் பிடிக்க வேடன் கண்ணிகளை வைக்கிறான். மீன்களைப் பிடிக்க தூண்டிலில் புழுக்களை வைக்கிறான். குரங்குகளைப் பிடிக்க என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு சிறு குடுவையில் சிறிய ஓட்டையைப் போட்டு அதற்குள் வறுத்த வாசனையான வேர்க்கடலைகளைப் போட்டு அதன் வழியில் வைப்பார்கள்.
அந்த வாசனையை அறிந்து, குரங்கானது அந்த சிறிய குடுவைக்குள்ளாக கைகளை நுழைத்து அவ்வளவு வேர்க்கடலைகளையும் ஒரே நேரத்தில் அள்ளும். கைநிறைய வேர்க்கடலைகளுடன் வெளியே இழுக்கும்போது கை வெளியே வர இயலாது. அதே நேரம் அது விரும்புகிற நிலக்கடலையை விட்டுவிடவும் மனம் வராது. அதை இறுகப்பற்றிக்கொண்டே கையை வெளியே எடுத்துவிட தொடர்ந்து முயற்சிக்கும்.
அப்பொழுது அதற்குக் கண்ணிவைத்தவர்கள் தடி எடுத்துக்கொண்டு ஓடி வருவார்கள். தன்னை அடிக்கப்போகிறவர்கள், பிடித்துக் கொன்றுவிடப்போகிறார்கள் என்று அந்த குரங்கு அறிந்திருந்தாலும்கூட நிலக்கடலையை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க அதற்கு யோசனை வராது. குடுவையோடுகூட ஓடவும் முடியாமல் கடைசியில் பிடிபட்டுவிடும்.
இன்றைக்கு மனிதரும் அப்படித்தான் பாவ பழக்கவழக்கங்களைப்பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். விட்டுவிட மனமில்லை! முதலில் ஒரு சிகரெட்தானே என்றும், நண்பர்களோடு கொஞ்சம்போல குடித்தால் என்ன என்றும், ஒரு நாள் மட்டும் கொஞ்சம் கஞ்சா புகைத்தால் என்ன என்றும் எண்ணி அவற்றில் ஈடுபடுவதால் இறுதியில் அப்பாவக் காரியங்களுக்கு அடிமையாகிவிட நேடுகிறது. விபச்சார வேசித்தன ஆவிகள் ஒருவனை அடிமையாக்கி பாதாளத்தை நோக்கி இழுத்துச்செல்லுகின்றன.
வேதம் சொல்லுகிறது, “உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்” (எண். 32:23). அப். பவுல் எழுதுகிறார், “சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்” (1 தீமோ. 5:24).
சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தங்கள் சுய நீதியையே பிடித்துக்கொண்டு தங்களுக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில்லாமல் குரங்குப்பிடி பிடித்து சாதிக்க எண்ணுகிறதினாலே குடும்ப சமாதானத்தையே இழந்துபோகிறார்கள். ஒற்றுமையை இழந்துவிடுகிறார்கள். இப்படி உடைக்கப்பட்டுப் பிரிந்துபோன குடும்பங்கள் ஏராளம்.
“மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டில் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டுவந்து” (ஏசா. 5:18) என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார். தேவ பிள்ளைகளே, பாவத்தை விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டிராமல் விட்டு விலக முற்படுங்கள். உங்களை நீங்களே முழுவதுமாகக் கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்து விடுதலை பெறுங்கள்.
நினைவிற்கு:- “துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்” (சங். 19:13).
