No products in the cart.
ஏப்ரல் 25 – ஆராதனையின் ஆறுதல்
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங். 37:4).
துதியிலே மகிழ்ச்சி இருக்கிறது. தேவபிரசன்னம் இருக்கிறது. துதிகளின் மத்தியிலே கர்த்தர் வாசம் செய்வதுடன் நீங்கள் துதித்து ஆராதிக்கும்போது அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களையெல்லாம் உங்களுக்கு அன்புடன் நிறைவேற்றுகிறார்.
ஒரு சகோதரிக்கு பிரச்சனைக்குமேல் பிரச்சனைகள் வந்தன. இப்போராட்டங்களோடே கொடிய அம்மை நோயும் வந்தது. ‘ஏன் எனக்கு இந்த போராட்டங்கள், வியாதிகள், வறுமைகள்’ என்று அங்கலாய்த்து கதறி ஜெபிக்க ஆரம்பித்தாள்.
கர்த்தர் ஒரு வெறுமையான கூடையைத் தரிசனத்திலே காண்பித்தார். “உன் வாயில் துதி இல்லை. உன் உள்ளத்தில் ஆராதனை இல்லை. வெறும் கூடையாகவே காணப்படுகிறாய். நன்றியில்லாத வெறுமையான இருதயமாய் உன்னுடைய இருதயம் இருக்கிறபடியினால்தான் சாத்தான் உனக்குள் அதிகமான போராட்டங்களைக் கொண்டுவந்தான்” என்று பேசினார். தன் குறையை உணர்ந்த அந்த சகோதரி, அந்த இரவிலே முழங்கால்படியிட்டு கர்த்தரைப் பாடித் துதிக்க ஆரம்பித்தாள்.
சிறு வயதிலிருந்து கர்த்தர் தனக்குச் செய்த நன்மைகளை எல்லாம் எண்ணி எண்ணி ஆண்டவரைத் துதித்தாள். வேதத்திலே கர்த்தர் செய்த அற்புதங்களை எல்லாம் தியானித்து, தியானித்து ஆண்டவரை மகிமைப்படுத்தினாள். மடைதிறந்த வெள்ளம்போல துதி அவளுள்ளிருந்து பொங்கி வந்தது. நருங்குண்ட, நொறுங்குண்ட இருதயத்தோடு அவள் கர்த்தருக்கு நன்றி செலுத்தி ஆராதனை செய்தாள்.
துதித்துக்கொண்டே, தன்னை அறியாமல் நன்றாய் தூங்கிவிட்டாள். காலையில் எழுந்தபோது அவளுடைய சரீரத்தில் அம்மைநோயோ வேறு எந்த பெலவீனமோ காணப்படவில்லை. புது மகிழ்ச்சி, தேவ பெலன், தேவ வல்லமை ஆகியவை அவளில் நிரம்பி வழிந்தன.
வேதம் சொல்லுகிறது, “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்பொழுதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபி. 13:15). உங்களுடைய இருதயமும், உங்கள் வீடும் தேவ மகிமையால் நிரம்ப வேண்டுமா? தேவனைத் துதித்து ஆராதியுங்கள். உங்களுடைய குறைகள் தேவனுடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே நிறைவாக வேண்டுமா? கர்த்தரைத் துதியுங்கள். உங்கள் பலவீனங்களும், நோய்களும் நீங்கி தெய்வீக ஆரோக்கியம் உங்களை மூட வேண்டுமா? கர்த்தரைத் துதியுங்கள்.
துதித்தலே ஏற்றது. துதித்தலே இன்பமானது. வேதம் சொல்லுகிறது. “நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள். துதி செய்வது செம்மையானவர்களுக்குத் தகும்” (சங். 33:1) துதி தேவனுடைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். துதிக்கும்போது தேவபெலன் உங்களை ஆட்கொள்ளும். “உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பெலத்தின் மேல் பெலன் அடைந்து சீயோனிலே தேவ சந்நிதியிலே வந்து காணப்படுவார்கள்” (சங். 84:4-7).
நினைவிற்கு:- “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக” (சங். 107:9).