No products in the cart.
ஏப்ரல் 24 – யாவையும் செய்துமுடிப்பார்!
“கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார்” (சங். 138:8).
எனக்காக வழக்காட யார் உண்டு, யார் எனக்கு உதவி செய்வார்கள், யார் என் காரியங்களைப் பொறுப்பெடுத்து நடத்துவார்கள் என்று உலக மக்கள் இன்று கண்ணீரோடு ஏங்கித் தவிக்கிறார்கள். ஆனால், தாவீதோ, தன் முழு பாரத்தையும் முழு நம்பிக்கையையும் கர்த்தர்மேல் வைத்து ‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்’ என்று சொல்லித் துதிக்கிறார்.
ஒருவர் வாடகை வீட்டிலே பல வருடங்களாய் இருந்து மனம் நொந்துபோனார். வீடு கட்ட பணம் இல்லையே, என்ன செய்வது என்று வருந்திய அவர் இந்த வசனத்தை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு ஊக்கமாய் ஜெபிக்க ஆரம்பித்தார். கர்த்தர் அவருக்காக யாவையும் செய்துமுடித்து போதுமான பணத்தைத் தந்தருளினார்.
ஆனால், வீடுகட்டும் வேலையை மேற்பார்வை பார்க்கும் ஆற்றல் அவருக்கு இல்லை. கட்டிட காண்டிராக்டர்கள் தன்னிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவருக்கு ஏற்பட்டது. ‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்’ என்று சொல்லி மீண்டும் விசுவாசத்தோடு துதித்தார். அப்பொழுது கட்டிடக்கலையில் தேர்ச்சிபெற்ற அவருடைய பழைய நண்பர் ஒருவர் தாமாக முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அழகான ஒரு வீடு அவருக்காகக் கட்டி முடிக்கப்பட்டது.
கர்த்தர் சொல்லுகிறார், “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரே. 32:27).
நீங்கள் ஆராதிக்கிற தேவனாகிய கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவர் உங்களை நேசிக்கிறவர். அதே நேரத்தில் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கக்கூடிய வல்லமையுள்ளவர். கல்லுகளிலிருந்து ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லமையுள்ளவர் (லூக். 3:8). உங்களைச்சுற்றிலும் அக்கினி பற்றியெரிந்தாலும் அதிலிருந்து உங்களைக் காக்க வல்லவர் (தானி. 3:27).
வாக்குத்தத்தம்பண்ணினவைகளை நிறைவேற்ற வல்லமையுள்ளவர் (ரோம. 4:21). நீங்கள் நினைக்கிறதற்கும், வேண்டிக்கொள்ளுகிறதற்கும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிக்க வல்லவர் (எபே. 3:20). நீங்கள் எதை அவரிடத்தில் ஒப்புக்கொடுத்தீர்களோ அதை வருகைமட்டும் காக்க வல்லவர் (2 தீமோ. 1:12).
ஒருவேளை சூழ்நிலைகள் பயங்கரமாய் இருக்கலாம். மருத்துவர்கள் முடியாது என்று சொல்லியிருக்கலாம். வக்கீல்கள் முடியாது என்று சொல்லியிருக்கலாம். திருமணம் ஆகாது, குழந்தை பிறக்காது, வேலை கிடைக்காது, ஊழியம் வளராது என்று பலவிதமாய்ப் பேசி சாத்தான் உங்களை சோர்வுறப்பண்ணியிருக்கலாம். பயப்படாதிருங்கள். உங்களோடுகூட இருக்கிறவர் சர்வ வல்லமையுள்ளவர். எல்லா சூழ்நிலையிலும் உங்கள் கண்கள் அந்த வல்லவரையே அன்போடு நோக்கிப்பார்த்து ‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்’ என்று சொல்லட்டும்.
சிருஷ்டிப்பிலே உங்களுக்காக யாவையும் செய்து முடித்தவர், கல்வாரி சிலுவையிலே உங்களுக்காக யாவையும் செய்து முடித்தவர், இன்று நீங்கள் இருக்கும் நிலைமையிலேயும் உங்களுக்காக யாவையும் செய்து முடித்தருளுவார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். அவருடைய வாக்குத்தத்தங்கள் நிச்சயம் நிறைவேறும்.
நினைவிற்கு:- “எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்” (சங். 57:2).
