No products in the cart.
ஏப்ரல் 24 – மனைவியினிடத்தில்!
“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்” (எபே. 5:25).
‘புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்” (எபே. 5:28).
கணவனுக்கும் மனைவிக்கும் அப். பவுல் ஆலோசனை கொடுக்கும்போது மனைவிகளைப் பார்த்து, ‘கணவனுக்குக் கீழ்ப்படியுங்கள்’ என்று சொன்னார் (எபே. 5:22). புருஷர்களைப் பார்த்து, ‘மனைவியில் அன்புகூருங்கள்’ என்று சொன்னார். குடும்ப வாழ்க்கையைக் கட்டியெழுப்ப கீழ்ப்படிவதும், அன்புகூருவதும் மிகமிக அவசியமாகும்.
புருஷன் மனைவியினிடத்திலே எப்படி அன்புகூரவேண்டும்? கிறிஸ்து சபையில் அன்புகூருவதைப்போல அன்புகூரவேண்டும். அன்புக்கு முன்மாதிரியாக கிறிஸ்துவையே வேதம் நமக்குக் காண்பிக்கிறது.
ஆம், கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்ததினால் சபையை தனது சுய இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்டார். சபையின் மீதுள்ள தமது அன்பை வெளிப்படுத்துவதற்காக சபையை, ‘சரீரம்’ என்றும், தன்னைத் ‘தலை’ என்றும் உவமானப்படுத்தினார். மட்டுமல்ல, சபையானது மணவாளனாகிய கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருக்கிறது.
இந்த அன்பின் சாயலை இந்த உலக வாழ்க்கையில் தம் மக்கள் அனுபவிப்பதற்காக தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தினார். ‘அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ (ஆதி. 2:24; மாற். 10:8) என்ற அன்பின் இணைப்பையும் ஏற்படுத்தினார்.
வேதம் சொல்லுகிறது, “அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்” (எபே. 5:33).
எல்லா மனித உறவுகளுக்கும் அடிப்படையானது குடும்பம்தான். குடும்பம் அன்புள்ளதாகவும், ஐக்கியமுள்ளதாகவும், ஒருமனப்பாடுள்ளதாகவும் இருக்கும்போது நிச்சயமாகவே அந்தக் குடும்பம் ஒரு குட்டி பரலோகமாகக் காணப்படும். தேவபிரசன்னம் அந்த வீட்டில் நிரம்பியிருக்கும். பரிசுத்தாவியானவரின் மகிமையும், மனநிறைவும், எப்பொழுதும் காணப்படும்.
இன்று அநேக குடும்பங்களில் காணப்படும் நிலை என்ன? அன்புத்தாழ்ச்சியினால் குடும்பத்தின் அஸ்திபாரம் அசைகிறது. கோபமும் எரிச்சலும் நிறைந்த வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கிறது. குடும்ப ஜெபநேரத்தை தொலைக்காட்சி ஆக்கிரமித்துக்கொண்டது. இதனால் உடைந்தும் இடிந்தும்போன குடும்பங்கள் அநேகம். பிரிந்துபோன உறவுமுறைகள் ஏராளம். விவாகரத்துக்கள் அதிகமாகக் காணப்படுவதற்கு வேறென்ன காரணம் இருக்கமுடியும்?
வேதம் சொல்லுகிறது, ‘ஞானம் தன் வீட்டைக் கட்டுகிறது’ (நீதி. 9:1). ‘புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்’ (நீதி. 14:1). ‘கர்த்தரும் வீட்டைக் கட்டுகிறார்’ (சங். 127:1). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (பிர. 4:12). கணவனும் மனைவியும் கர்த்தரும் இணைந்து வீட்டைக் கட்டும்போது அங்கே தெய்வீக அன்பு பிரசன்னமாயிருக்கும். என்னதான் சோதனைக் காற்று வீசினாலும், போராட்டத்தின் புயல்கள் வந்தாலும், அந்த வீடானது சிறிதும் அசைந்துகொடுக்காமல் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்.
நினைவிற்கு:- “தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்” (எபே. 5:29).