bandar togel situs toto togel bo togel situs toto musimtogel toto slot
Appam, Appam - Tamil

ஏப்ரல் 21 – கர்த்தர் மன்னிப்பது!

“உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்” (எண். 14:19,20) என்றார்.

கர்த்தருடைய இனிய சுபாவங்களில் ஒன்று மனப்பூர்வமாய் மன்னிப்பதாகும். மன்னிப்பில் நான்கு வகையுண்டு. நீங்கள் முதலாவது பெறும் மன்னிப்பு, கர்த்தரிடத்திலிருந்து பெறும் மன்னிப்பாகும்.

ஒருநாள் காலையிலே, அழுக்கடைந்த சாக்கடை ஒன்றிலிருந்து அசுத்தமான துர்நாற்றம் வீசுகிற ஒரு சாக்கடைத் துளி வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, “ஆண்டவரே என் பரிதாபமான நிலைமையை கண்ணோக்கிப் பாரும். சாக்கடையாக ஜனங்களுக்கு அருவருப்பான துர்வாடை வீசிக் கொண்டிருக்கிறேனே. என்னை ஒரு அழகான தூய்மையான நீர்த்துளியாய் மாற்றக்கூடாதா?” என்று ஜெபித்தது. கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டார்.

பரலோக சூரியனின் ஒளி அந்தச் சாக்கடைத் துளியின்மேல் படவே, அந்த வெப்பத்தினால் நீர்த்துளி மெதுவாக ஆவியானது. மேலே சென்றது. அந்த நீர்த்துளி மறுநாள் காலையிலே மலையின் உச்சியின் மீது, தூய்மையான பனித்துளியாக அழகான ஒளியை வீசி பிரகாசித்தது.

நீங்களும் ஒருவேளை சாக்கடை போன்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும். உளையான பாவ சேற்றிலே உழன்றுகொண்டிருக்கக்கூடும். என்றாலும்கூட அதைரியப்படாதீர்கள். உங்களுக்கும் ஒரு நம்பிக்கை உண்டு.

நீங்கள் நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். கல்வாரியின் காருண்யங்களை தியானித்துப்பாருங்கள். இந்த அருவருப்பான சூழ்நிலையிலிருந்து கர்த்தர் உங்களை வேறுபிரித்து, உன்னதங்களிலே அவரோடேகூட உயர்த்தி, எழும்பிப் பிரகாசிக்கச்செய்வார்.

ஒரு தேவனுடைய ஊழியக்காரர் கீழ்க்கண்டவாறு ஜெபித்தார். “தேவனே மாயையைக் காணாத கண்களையும், உம்மை முழு இருதயத்தோடு நேசிக்கிற இருதயத்தையும் எனக்குத் தாரும்” என்று மனதுருகி ஜெபித்தார். மேலும், “கர்த்தாவே நான் எவ்வித கறையுமற்ற பளிங்குபோன்ற தூய ஜீவியம் செய்யும்வரையிலும் தயவு செய்து என்னைப் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளாதிரும்” என்று ஜெபித்து கர்த்தரிடம் மன்றாடினார்.

இந்த ஜெபத்தைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு வாலிபனின் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டன. அவன் தன் பாவ வாழ்க்கையை விட்டு விலகி, பரிசுத்தமான வாழ்க்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தான்.

அநேகர் பாவிகளாகவும், பின்மாற்றக்காரர்களாகவும் வாழுவதற்குக் காரணம் அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பயன்படுத்திக்கொள்ளாமலிருப்பதுதான். உங்களுடைய பாவங்களையெல்லாம் கழுவி சுத்திகரிப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் கர்த்தர் கல்வாரிச் சிலுவையிலே ஏற்கெனவே செய்து முடித்துவிட்டார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் எப்போது உங்கள் பாவங்களுக்காக, மனஸ்தாபப்பட்டு சிலுவையை நோக்கிப் பார்க்கிறீர்களோ, அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்களைக் கழுவிச் சுத்திகரித்து மாசற்றவர்களாய் மாற்றிவிடும்.

நினைவிற்கு:- “பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்” (1 யோவான் 2:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.