No products in the cart.
ஏப்ரல் 20 – கூர்மையானது!
“இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்” (ஏசா. 41:15).
கர்த்தருடைய இந்த வாக்குத்தத்தம் எத்தனை இனிமையானது! அவர் நம்மைக் காணும்போது கூர்மையான யந்திரத்தைப்போல காண்கிறார். மலைகளை மிதித்து நொறுக்கக்கூடிய வல்லமையுள்ளவர்களாய் காண்கிறார்.
ஒரு கோடாரியை எடுத்து மரம்வெட்ட விரும்புகிறவன் அந்தக் கோடாரி கூர்மையுடையதாய் இருக்கிறதா என்பதை முதலில் சோதித்துப்பார்க்கிறான். அப்படி கூர்மையில்லாமல் மழுங்கியிருந்தால் மரத்தை வெட்டும்போது அவனுடைய பெலன்தான் வீணாகுமேதவிர மரம் வெட்டப்படுவதில்லை.
நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் முதலில் ஜெபித்துவிட்டுச் செய்வீர்கள் என்றால் அந்த காரியம் உடனே வாய்க்கிறதைக் காணலாம். ஜெபிக்காமல் செய்வீர்கள் என்றால் நீங்கள் மழுங்கிய கோடாரியைப்போல் உங்கள் காரியம் ஒன்றும் வாய்க்காமல் துக்கத்துடனே திரும்புவீர்கள்.
உதாரணமாக, நீங்கள் ஒரு நபரைச் சந்திக்க செல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பஸ் எடுத்து பிரயாணம்பண்ணி அவருடைய வீட்டிற்குப் போகும்போது அங்கே அவர் இப்பொழுதுதான் வெளியே போய்விட்டார் என்று சொல்லிவிட்டால் மாலையிலே திரும்பவும் செல்லுவீர்கள். இப்படிப் பலமுறை முயற்சித்தும் அவரைச் சந்திக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். முழங்கால்படியிட்டு ஜெபியுங்கள். ‘ஆண்டவரே, நான் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். இதுவரை ஜெபிக்காமல் போனதினால் அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. இப்பொழுது நீர் பொறுப்பெடுத்துக்கொண்டு நான் அவரைச் சந்திக்க உதவுங்கள்’ என்று ஜெபத்தில் கேளுங்கள். நீங்கள் எதிர்பார்த்திருந்த நபர் உங்களைத் தேடி உங்களுடைய வீட்டிற்கு அவராகவே வருவார். இதுதான் மழுங்கிய கோடாரியால் மரம் வெட்டுவதற்கும், கூர்மையான கோடாரியால் மரம் வெட்டுவதற்குமுள்ள வித்தியாசம்!
உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை கூர்மையாக்கி, கர்த்தருடைய பாதத்தில் காத்திருங்கள். உங்களை நீங்களே ஆராய்ந்துபாருங்கள். சீர்ப்படுத்தவேண்டியவைகளை சீர்ப்படுத்த நேரத்தை ஒதுக்குங்கள். கர்த்தருக்குக் காத்திருங்கள். வேதம் சொல்லுகிறது: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31).
பல வேளைகளில் நம்முடைய சரீரம் களைத்துவிடக்கூடும். சோர்புற்றுவிடக்கூடும். ஜெபிக்கமுடியாமல் தொய்ந்துபோகக்கூடும். அப்பொழுது நீங்கள் மழுங்கிய கோடாரியைப்போல இருக்கக்கூடாது.
தேவபிள்ளைகளே, நீங்கள் ஜெபிக்கமுடியாத சூழ்நிலையிலும் கர்த்தரை நோக்கி ஸ்தோத்திரம்பண்ணுங்கள். மெதுவாக அந்நிய பாஷையிலே பேசி கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்தில் புதிதான ஆவியைக் கட்டளையிடுவார் (எசே. 36:26).
நினைவிற்கு:- “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17).
