No products in the cart.
ஏப்ரல் 17 – சோர்ந்துபோகாதே!
“பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ?” (ஏசா. 40:28).
தேவ ஜனங்களை வீழ்த்தும்படி சாத்தான் உபயோகிக்கிற கொடிய ஆயுதங்களில் ஒன்று மனச்சோர்வு ஆகும். இந்த ஆயுதம் அநேக விசுவாசிகளைத் தாக்கியிருக்கிறது. அநேக ஊழியர்களையும் அசைத்திருக்கிறது.
ஆனால், நம்முடைய அருமை ஆண்டவரை நோக்கிப்பாருங்கள். அவர் ஒரு நாளும் சோர்ந்துபோகாதவர். நாம் சோர்ந்துபோகிறதையும் அவர் விரும்புவதில்லை. ஆகவேதான், “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” என்று வேதம் சொல்லுகிறது (ஏசா. 40:29).
சிலருக்கு எப்பொழுதும் சரீரத்திலே சோர்வு உண்டு. சிலருக்கு மனதிலே சோர்வு உண்டு. மனதில் சோர்வு வந்துவிட்டால் உற்சாகத்தை இழந்தவர்களாய், முகம் இருளடைந்து, ஏதோ நடைப்பிணம்போல காட்சியளிப்பார்கள். ஆனால், கர்த்தரைத் துதித்து மகிழுகிறவர்களோ எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பார்கள்.
உங்கள் உள்ளத்திலே சோர்வு ஏற்பட்டுவிட்டால் உடனே தேவனுடைய பாதத்துக்குச் சென்றுவிடுங்கள். தேவனுடைய பிள்ளைகளோடு சேர்ந்து கர்த்தரை உற்சாகமாய் ஆராதியுங்கள். “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதி. 17:22) என்றும், “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது” (நீதி. 24:10) என்றும் ஞானி சொல்லுகிறார்.
சிலருக்கு சரீரத்திலோ, ஆத்துமாவிலோ இல்லாமல் ஆவியிலே சோர்வு உண்டாகிவிடும். ஆவி எப்பொழுதும் கலங்கிக்கொண்டே இருக்கும். பயமும், கவலையும் வாட்டும். வேதம் வாசிக்க பிரியம் இராது. ஜெபிக்க மனம் வராது. அப்படியானால் ஏதோ ஒரு சத்துரு உங்களுக்கு விரோதமாய் போராடுகிறான் என்பதை திட்டமாய் அறிந்துகொள்ளுங்கள். கர்த்தருடைய ஊழியக்காரர்களிடம் போய் ஆலோசனை கேட்டு அவர்களிடம் ஜெபித்துக்கொள்ளுங்கள்.
மட்டுமல்ல, உங்களுடைய ஆவியிலே போராடும் சத்துருவோடும் எதிர்த்து நில்லுங்கள். சாத்தானுக்கு எதிர்த்து நின்றாலே அவன் ஓடிப்போய்விடுவான். நான் தேவனுடைய பிள்ளை. சாத்தானே உன்னால் என்னைத் தொடமுடியாது என்று உறுதியாய் கட்டளையிடுங்கள். அடுத்து கர்த்தரை வாய்விட்டு துதிக்க ஆரம்பித்துவிடுங்கள். கர்த்தரைத் துதிக்கத் துதிக்கத்தான் உங்களுடைய ஆவியிலே ஒரு பெரிய விடுதலை உண்டாகும்.
இயேசு கிறிஸ்து துதியின் உடையை கொடுப்பதற்காகவே இந்த பூமிக்கு இறங்கிவந்தார் அல்லவா! வேதம் சொல்லுகிறது, “சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்” (ஏசா. 61:3).
தேவபிள்ளைகளே, அந்தத் துதியை உங்களுடைய உடையாக ஏற்றுக்கொள்ளுங்கள். துதிப்பதற்குச் சற்று சிரமமாயிருந்தாலும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து துதித்துக்கொண்டே இருக்கும்போது கண்டிப்பாக விடுதலை உண்டாகும். உள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாகும். கட்டுகள் யாவும் அறுந்துபோகும்.
நினைவிற்கு:- “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலா. 6:9).
