No products in the cart.
ஏப்ரல் 12 – மழையைப்போல வருவார்!
“அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்” (ஓசி. 6:3).
நம் கர்த்தர் நம்மிடத்தில் வருவார். எப்படி வருவார்? குளிர்ச்சியான மழையைப்போல புத்துணர்வைத் தரும் பின்மாரியைப்போல நம்மிடத்தில் வருவார். எத்தனை அருமையான வாக்குத்தத்தம்! நமக்கு எத்தனை மகிமையான எதிர்பார்ப்பு!
அவர் உன்னதங்களில் இருக்கிறார். நாம் பூமியில் இருக்கிறோம். உன்னதத்திலிருந்து இறங்கி வருகிற மழையைப்போல அவர் பூமிக்கு இறங்கிவருவார். வானாதிவானங்களில் இருந்து பூமியில் வாழும் அவருடைய பிள்ளைகளாகிய நம்மை நோக்கி இறங்கி வருகிறார். எத்தனை மகிழ்ச்சி!
மழை இறங்கி வரும்போது வறண்டு கிடக்கிற குளங்கள் எல்லாம் நிரம்பி ஆறுகளாய் பாய்ந்து ஓட ஆரம்பிக்கின்றன. அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவரானபடியால், ஏரிகள் எல்லாம் நிரம்பி அணைகட்டுகளின் வழியாய் தண்ணீர் புறப்பட்டு வந்து தேசத்தைச் செழிப்பாக்கும்.
எங்கேயோ இருக்கும் வானத்திலிருந்து பூமிக்கு வந்துசேரும் மழை பூமியிலுள்ள மண்ணோடு ஒன்றாக கலந்து தண்ணீராக ஓடுகிறது. அப்படித்தான் உன்னதங்களிலே வாழ்கிற இயேசு நமக்காக பூமியிலே இறங்கி வந்தார். கல்வாரி சிலுவையிலே நமக்காக நொறுக்கப்பட்டு பிழியப்பட்டார். முழு இரத்தத்தையும் ஊற்றிக்கொடுத்தார். அவருடைய இரத்தம் முழுவதும் கல்வாரிமேட்டிலே ஊற்றப்பட்டு செந்நிறமாய் நமக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. அது நம்முடைய பாவங்கள், சாபங்கள், நோய்களையெல்லாம் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது.
மழை என்பது கல்வாரியின் இரத்தத்துக்கு மாத்திரமல்ல, பரிசுத்த ஆவியானவருக்கும் அடையாளமாகும். இந்த கடைசி நாட்களிலே கர்த்தர் தம்முடைய ஆவியை பின்மாரி மழையைப்போல ஊற்றிக்கொண்டிருக்கிறார். மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம் அல்லவா?
சபை பாகுபாடின்றி கர்த்தர் தமது அபிஷேகத்தை ஊற்றிக்கொண்டிருக்கிறார். கர்த்தருடைய வருகைக்கு முன்பாக ஒரு பெரிய பின்மாரியின் மழை ஊற்றப்படத்தான் செய்யும். யார் யார் அந்த மழைக்காக தாகத்தோடு காத்திருக்கிறார்களோ அவர்கள்மேல் அவர் முன்மாரி பின்மாரியைப்போல வருவார்.
ஒரு மனிதனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை செழிப்பாக்குவது எது? விசுவாசிகளுடைய வாழ்க்கையிலே மகிமையான கனிகளைக்கொண்டுவருவது எது? ஆம்! அது ஆவியானவரின் அபிஷேகம்தான். ஆவியானவர்தான் வேதத்தின் ஆழங்களை நமக்குப் போதித்து ஆத்துமாவை செழிப்பாக்குகிறவர்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய அபிஷேகத்திற்காக தாகம் கொள்ளுவோமாக! வாஞ்சையோடு அவரை நோக்கிப்பார்த்து, ‘ஆண்டவரே, நீர் வாக்குப்பண்ணினதுபோல மழையாக எங்கள்மேலே வாரும். எங்கள் உள்ளத்திலே பெரிய எழுப்புதலைக் கட்டளையிடும். வாரும் ஆண்டவரே’ என்று அழைப்போமா?
நினைவிற்கு:- “புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்” (சங். 72:6,7).
