No products in the cart.
ஏப்ரல் 10 – பரிசோதிக்கும் மழை!
“பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை” (மத். 7:25).
ஆண்டவர் இரண்டு வீடுகளை நமக்கு முன்பாக நிறுத்துகிறார். ஒருவேளை அந்த வீடுகள் வெளிப்பார்வைக்கு ஒன்றுபோலத்தான் இருக்கக்கூடும். ஒன்றுபோல் கதவுகள், ஒன்றுபோல் ஜன்னல்கள், ஒன்றுபோல் வர்ணம் தீட்டப்பட்ட நிலைமை. வெளித்தோற்றத்துக்கு இரண்டுமே அழகானதாக இருந்திருக்கக்கூடும்.
ஆனால், ஒருநாள் மழையானது அந்த வீடுகளை பரிசோதித்துப் பார்த்தது. ஒரு வீடு உறுதியாய் நின்றது. மறுவீடோ விழுந்துபோனது. ஒரு வீடு நிலைத்திருந்ததற்கு காரணம் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் இடப்பட்டிருந்தது. மற்ற வீடு விழுந்து அழிந்ததற்குக் காரணம் அது மணலின்மேல் அஸ்திபாரம் இடப்பட்டிருந்தது.
இயேசு சொன்னார், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத். 7:24).
அபிஷேக மழை சோதிக்கும். ஆவியானவர் தம் ஜனத்தை நிச்சயமாகவே பரிசோதித்துப்பார்ப்பார். ஒரு தனிப்பட்ட விசுவாசியானாலும் சரி, ஒரு ஊழியமானாலும் சரி, ஒரு சபையானாலும் சரி, அல்லது ஒரு ஸ்தாபனமானாலும் சரி, கிறிஸ்துவாகிய கன்மலையின்மேல் அஸ்திபாரம் இடப்பட்டிருந்தால்தான் சோதனைகாலங்களில் உறுதியாய் நிற்கமுடியும்.
வேதம் சொல்லுகிறது, “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது” (1 கொரி. 3:11). அந்தக் கன்மலை கிறிஸ்துவே” (1 கொரி. 10:4).
உங்கள் அஸ்திபாரம் எப்படி இருக்கிறது? கன்மலையாகிய கிறிஸ்துவிலே உறுதியாய் இருக்கிறதா? வசனத்தின்படி அஸ்திபாரம் இடப்பட்டிருக்கிறதா? உங்களுடைய வாழ்க்கை தேவனுடைய வார்த்தையின்படியான வாழ்க்கையாய் இருக்கிறதா? சற்று ஆராய்ந்துபாருங்கள்.
மழை சோதிக்கிறதுபோல அக்கினியும் சோதிக்கும். ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகியவற்றினால் கட்டினால் அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியாலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்பதை அக்கினியானது சோதித்து வெளிப்படுத்தும் (1 கொரி. 3:12,13).
கடைசி நாட்களிலே தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் மழையும், அக்கினியும் சோதிக்க ஆயத்தமாயிருக்கிறது. கன்மலையாகிய கிறிஸ்துவின்மேல் அஸ்திபாரமிடப்பட்டு வசனத்தின்படி வாழுகிறவர்கள் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பார்கள். ஆனால், சரியான பிரதிஷ்டையும், உறுதியும் இல்லாமல், ஆவிக்குரிய வாழ்க்கை சரியாக கட்டப்பட்டு எழுப்பப்படவில்லையென்றால் அதே மழையும், அக்கினியும் அவர்களுக்கு நியாயத்தீர்ப்பாய் முடிந்துவிடக்கூடும்.
தேவபிள்ளைகளே, இந்த சோதனைக்கு நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா?
நினைவிற்கு:- “நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினேன்” (சங். 17:3).
