No products in the cart.
ஏப்ரல் 08 – லீபனோன்!
“என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை. லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா” (உன். 4:7,8).
உன்னதப்பாட்டு என்பது ஆழமான ஆவிக்குரிய அனுபவங்கள் பொதிந்திருக்கிற ஒரு பாடல் புத்தகம் ஆகும். சாலொமோன் இளம்வயதுடையவராய் இருந்தபோது, தேவனோடு அதிகமாய் உறவாடினார். தேவனைப் பிரியப்படுத்தினார். தேவனுக்கென்று திரளான பலிகளைச் செலுத்தினார். ஆகவே, கர்த்தர் சாலொமோனுக்கு அளவற்ற ஞானத்தைக் கொடுத்தார்.
அந்த அளவற்ற ஞானம்தான் நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களை எழுதுவதற்கு சாலொமோனுக்கு உதவியாயிருந்தது. இந்த உன்னதப்பாட்டுப் புத்தகம் கிறிஸ்துவுக்கும் சபைக்கும் இடையே உள்ள உன்னதமான உறவை, மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் இடையிலுள்ள ஆழமான உறவாக வெளிப்படுத்துகிறது.
லீபனோன் என்ற வார்த்தைக்கு வெண்மலை என்பது அர்த்தம். இஸ்ரவேல் தேசத்தில் வடமேற்கே உள்ள மலை நாடு லீபனோன் என்று அழைக்கப்படுகிறது. எர்மோன் மலை இங்குதான் இருக்கிறது. இந்த மலையின் உச்சியில் உறைந்த பனி காணப்படுவதினால் இது வெண்மலை என்ற பெயரைப் பெற்றது.
‘லீபனோனிலிருந்து என்னோடு வா’ என்று நம் ஆத்தும நேசர் நம்மை அன்போடு அழைக்கிறார். வெண்மையான பரிசுத்தத்தோடு, கறைதிரையற்ற பரிசுத்தத்தோடு, மாசற்ற மணவாட்டியாக நீ என்னிடத்திலே வரவேண்டும் என்பதுதான் அந்த அழைப்பின் இரகசியம். கர்த்தருடைய வருகையிலே கர்த்தர் பரிசுத்தவான்களைத்தான் தம்மிடத்திலே கூட்டிச்சேர்ப்பார். கர்த்தர் சொல்லுகிறார், “பலியினாலே என்னோடே உடன்படிக்கைப்பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்” (சங். 50:5).
கிறிஸ்தவ வாழ்க்கையிலே, பரிசுத்தம் மிகவும் முக்கியமானது. நம்முடைய ஆத்தும நேசர் பரிசுத்தராய் இருக்கிறதினாலே நாமும் பரிசுத்தராய் இருக்கவேண்டும். அப். பேதுரு அதைக்குறித்து எழுதும்போது, “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேது. 1:15,16) என்று எழுதுகிறார்.
கிறிஸ்துவின் வருகைக்குரிய எல்லா அடையாளங்களும் இன்றைக்கு தீவிரமாய் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியிருக்கின்றன. உலக சம்பவங்கள் கர்த்தருடைய வருகை மிகவும் சமீபம் என்பதை நமக்கு தெளிவாய் சுட்டிக்காண்பித்துக்கொண்டே இருக்கின்றன.
ஆகவேதான், “பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன். என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை. லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா” (உன். 4:6-8) என்று ஆண்டவர் நம்மைப் பார்த்து துரிதமாய் அழைக்கிறார். தேவபிள்ளைகளே, உங்களைப் பரிசுத்தப்படுத்தி கர்த்தரின் வருகைக்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளுவீர்களா?
நினைவிற்கு:- “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி. 22:17).
