No products in the cart.
ஏப்ரல் 06 – நறுமணம் வீசும் ரோஜா!
“நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” (உன். 2:1).
ரோஜா மலரானது தேனீக்களையோ அல்லது வண்ணத்துப்பூச்சிகளையோ தேடிப்போகவேண்டியதில்லை. அதில் அழகும், தேனும், நறுமணமும் இருப்பதனால், நிச்சயமாகவே வண்டினங்களும், பூச்சி இனங்களும் தாமாக அதைத் தேடிவருகின்றன. அப்படியே நாம் தெய்வீக அன்பினால் நிரப்பப்பட்டவர்களாய் இருப்போமானால், நாம் ஆத்துமாக்களைத் தேடிப்போகவேண்டியதில்லை. ஆத்துமாக்கள் நம்மைத் தேடிவரும்படி தேவன் அனுப்புவார்.
ரோஜா மலர் ஒரு குறுகிய காலம்தான் இருக்கும். அதுபோலவே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் கொஞ்சகாலமே ஜீவித்தார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று மூன்றரை ஆண்டுகாலம் மட்டுமே ஊழியம் செய்தார். ஆனால் அது எத்தனைப் பயனுள்ள ஊழியம்! அவர் பரமேறிச்சென்று இரண்டாயிரம் ஆண்டுகளாகியும் அவருடைய உபதேசம் உலகமெங்கும் பரவி நறுமணம் வீசிக்கொண்டேயிருக்கிறது.
நாம் எவ்வளவு வருடங்கள் ஜீவிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, ஆனால் நாம் எப்படி ஜீவிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நம்முடைய இந்த ஒரே ஜீவியம் வெகு விரைவிலே கடந்துபோய்விடும். ஆனால் இந்த ஜீவியக்காலத்தில்தான் கர்த்தரை நேசிக்கவேண்டும். அவரில் அன்புகூரவேண்டும். அவருக்காக ஊழியம் செய்யவேண்டும்.
ஆம், நம்முடைய ஜீவியகாலமெல்லாம் கிறிஸ்துவை பிரதிபலிக்கிறவர்களாக அவருக்காக வாசனை வீசும் நற்கந்தமாக நாம் திகழ வேண்டும். ஆகவே உங்களுடைய வாழ்க்கையை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுங்கள். அவரே உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் நிறைவாக்குகிறவர்.
சுகந்த வாசனையான ஜீவியமே வெற்றியுள்ள வாழ்க்கை, பரிசுத்தமான ஜீவியம். நாம் நம்முடைய ஜீவியத்திலே எப்பொழுதும் கறைதிரையற்ற தூய்மையை விரும்பவேண்டும். வேதம் சொல்லுகிறது, “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவா. 3:3).
‘கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஜெயம்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்’ என்று முழங்கினார் அப். பவுல். “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்” (2 கொரி. 2:14,15) என்றும் அவர் சொல்லுகிறார்.
தேவபிள்ளைகளே, உங்களைக் குத்தும் முட்களைக்குறித்து சிறிதும் கவலைப்படாமல் கர்த்தருக்காக வாசனையைப் பரிமளிக்கத் தீர்மானியுங்கள். அப். பவுலையும் ஒரு முள் குத்திக்கொண்டேயிருந்தது. அந்த முள் நீங்கும்படி எவ்வளவோ விண்ணப்பம் செய்தார். கர்த்தர் கொடுத்த பதில் என்ன? “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரி. 12:9) என்பதே. எத்தனை ஆறுதலான வார்த்தை!
நினைவிற்கு:- “முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்” (உன். 2:2).
