No products in the cart.
ஏப்ரல் 04 – அழகான ரோஜா!
“நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” (உன். 2:1).
ரோஜாவிலே திருத்துவமுண்டு. அதற்கு அழகான வடிவமுண்டு, நல்ல நிறமுண்டு, சிறந்த வாசனையும் உண்டு. சில பூக்கள் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் வாசனை இருக்காது. சில பூக்களிடம் வாசனை இருக்கும். ஆனால் அழகு இருக்காது. ஆனால் சாரோனின் ரோஜாவாகிய கிறிஸ்துவிடமோ எல்லாம் இருக்கிறது. அவர் மிகுந்த அழகுள்ளவர், மிகுந்த வாசனையுள்ளவர், சகலவற்றிலும் பூரணமுள்ளவர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்த ஜான் எப். கென்னடி தன் வாலிபப்பிராயத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து, அதன்மூலம் கிடைத்த ஊதியத்தை ஒரு மிஷினெரி இயக்கத்திற்கு கொடுத்துவந்தார். மாலைநேரம் அவர் வீடு திரும்பும்போது அந்த தெருவெல்லாம் அந்த ரோஜா மலர்களின் நறுமணம் கமழ்ந்துகொண்டிருக்கும். வீட்டிற்குள் வேலை செய்துகொண்டிருக்கிறவர்கள்கூட அந்த வாசனையைக்கொண்டே ஜான் எப். கென்னடிதான் சாலையில் செல்கிறார் என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொள்வார்கள்.
இயேசுகிறிஸ்துவினுடைய அன்பின் நறுமணத்தை அன்று மட்டுமல்லாமல், இன்றும் 2000 ஆண்டுகளாக உலக ஜனங்கள் முகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஊற்றுண்ட பரிமளத்தைலமாகிய அவர், இன்றும் ஆத்துமாக்களை தம்மண்டை இழுத்துக்கொண்டிருக்கிறார்.
சிவப்பு ரோஜாவிலே ஏராளமான இதழ்கள் உள்ளன. அவை நேர்த்தியான அழகுள்ளவை, மேன்மையானவை, வாசனை வீசுகின்றவை. அவை ஒவ்வொன்றும் கிறிஸ்துவின் சுபாவத்தையும் குணாதிசயங்களையும் வெளிப்படுத்துகின்றன.
கிறிஸ்து அன்புள்ளவர், கிருபையுள்ளவர், தயவுள்ளவர், காருண்யமிக்கவர், மனதுருக்கம் உள்ளவர், தன்னண்டை வருகிறவர்களை புறம்பே தள்ளாதவர், அற்புதங்கள் செய்கிறவர் என்பதையெல்லாம் ரோஜா இதழ்கள் நமக்கு உணர்த்திக்காட்டுகின்றன.
அவருடைய சுபாவங்களும் குணாதிசயங்களும் நமக்கு முன்மாதிரியானவை. அவருடைய சுபாவம் நம்மில் உருவாகவேண்டாமா? நாம் இயேசுவைப்போலாக வேண்டாமா? நாம் கிறிஸ்துவின் நற்கந்தமாகத் திகழவேண்டாமா? எப்பொழுதும் மலர்ந்த முகத்துடனே காட்சியளிக்கும் அந்த சாரோனின் ரோஜாவானவர் நிச்சயமாகவே உங்கள் முகங்களையும் மலரச்செய்வார்.
பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். இராஜாதி இராஜாவாகிய அவருடைய அரண்மனையை அலங்கரிக்கும்படியாக நல்ல வாசனை நிறைந்த ஜீவியம் செய்த ரோஜாப்பூக்களைப்போன்ற அநேக பரிசுத்தவான்கள் அங்கு கடந்து சென்றுவிட்டார்கள்.
தேவபிள்ளைகளே, நம்முடைய ஜீவியமும் அழகு மிகுந்ததாகவும், வாசனை மிகுந்ததாகவும் காணப்படும்படியாக நம் ஜீவியத்தை பூரணமாய் அவருக்கு ஒப்புக்கொடுப்போமா? இந்த உலகத்தின் வழியாக நாம் ஒரே ஒருமுறைதான் கடந்துசெல்கிறோம். ஆகவே மற்றவர்களுக்கு ஏதாகிலும் நன்மை செய்யவேண்டுமானால் அதை இப்பொழுதே செய்யுங்கள்.
நினைவிற்கு:- “கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” (எபே. 5:2).
