No products in the cart.
ஆகஸ்ட் 24 – உள்ளங்களில் இளைப்பாறுதல்!
“சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்” (பிலே. 1:7).
வேதத்தில் மொத்தம் அறுபத்தாறு புத்தகங்கள் உண்டு. அதிலே, பிலேமோன் ஐம்பத்தேழாவது புத்தகம். இதிலே ஒரே ஒரு அதிகாரம்தான் இருக்கிறது. இது அப்.பவுல் ரோமாபுரியில் தனிமையாய் சிறையில் இருந்தபோது தன் எஜமானிடத்திலிருந்து தப்பி ஓடிவந்த அடிமையான ஒநேசிமுவை மன்னித்து சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி எஜமானரான பிலேமோனுக்கு பரிந்துரை செய்து எழுதிய கடிதமே இந்த அதிகாரமாகும்.
ஒரு அடிமையின் வாழ்விலே, இளைப்பாறுதல் வரவேண்டும் என்பதும் அவனை அரவணைத்து அன்பு செலுத்தவேண்டும் என்பதுமே அப்.பவுலின் இருதயத்துடிப்பாய் இருந்தது. ரோம சாம்ராஜ்யத்தில் ஒரு செல்வந்தர், தனக்குக் கீழிருக்கும் அடிமையை எப்படி வேண்டுமென்றாலும் நடத்தலாம். அந்த அடிமை வேலைக்காரனிலும் கீழானவனாகக் காணப்படுவான். சில அடிமைகள் வீட்டு வாசலில் உட்கார்ந்து வீட்டுக்கு வருகிறவர்களுடைய கால்களைக் கழுவி, சுத்திகரித்து, துணியினால் துடைத்து, உள்ளே அனுப்புவார்கள். சில அடிமைகள் வயல்வெளிகளிலே, அதிகாலையிலிருந்து இரவு வரையிலும் மாடுகளைப்போல உழைப்பார்கள். ஒரு அடிமை எஜமானைவிட்டு ஓடிப்போவானென்றால், அவனைச் சித்திரவதை செய்யவோ, சிறையில் தள்ளவோ அந்த எஜமானுக்கு உரிமையுண்டு.
இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்தபோது, “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:7,8). மட்டுமல்ல, அவர் ஒரு அடிமையைப்போல சீஷருடைய பாதங்களுக்கு அருகே உட்கார்ந்து, “சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்” (யோவான் 13:5).
எஜமானை விட்டு ஓடிப்போன ஒநேசிமு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இப்பொழுது அப்.பவுலோடுகூட இருந்தார். தனக்குப் பணி செய்யும்படி ஒநேசிமுவை வைத்துக்கொள்ளவேண்டிய தேவைகள் இருந்தபோதிலும், ஒநேசிமுவை பிலோமோனுக்கு பரிந்துரைக் கடிதத்துடன் அப்.பவுல் அனுப்பினார். “ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்” (பிலே. 1:17) என்று குறிப்பிட்டார்.
பிலேமோனின் விசேஷம் என்ன? பரிசுத்தவான்களுடைய உள்ளம் இளைப்பாற வேண்டுமென்பதேயாகும். சுவிசேஷம் பரம்புவதற்கு ஊழியர்களுக்கு என்னென்ன உதவி செய்ய முடியுமோ அத்தனையையும் பிலேமோன் செய்து வந்ததினால், அவரை நம்பி ஒநேசிமுவை அவரிடத்தில் அனுப்பினார்.
தேவபிள்ளைகளே, உங்கள் வீட்டிலே பரிசுத்தவான்கள் இளைப்பாற இடம் உண்டா? உண்மையும் உத்தமமுமான ஊழியர்களை அன்போடு நேசித்து உபசரிக்கிறீர்களா? நீங்கள் அவர்களுக்குச் செய்கிற உதவி கர்த்தருக்கே செய்கிற உதவி என்பதை உணருங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது கர்த்தரும் உங்களுடைய வீட்டிலே இளைப்பாறுவார்.
நினைவிற்கு:- “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்” (மத். 18:10).