Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 16 – மறுபடி சோதனை!

“பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்” (எண். 22:15).

புறஜாதியாருக்குள்ளே கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு தீர்க்கதரிசி இருந்தார். அவருடைய பெயர் பிலேயாம். பிலேயாம் யாரை ஆசீர்வதிக்கிறாரோ அவர்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார். அவர் யாரை சபிக்கிறாரோ அவர்கள் சபிக்கப்பட்டவர்களாவார்கள் என்று பாலாக் என்ற இராஜா அறிந்து, தனது ஸ்தானாபதிகளை அனுப்பி, அவரை அழைத்துவரும்படி சொன்னான் (எண். 22:5,6).

மேதியருடைய இராஜாவாகிய பாலாக்குக்கு இஸ்ரவேலரைக்கண்டு நடுக்கம் ஏற்பட்டது. ஐயோ, இஸ்ரவேலர் எகிப்திலிருந்து பெரிய ஜனக்கூட்டமாய் புறப்பட்டு பூமியின் விசாலத்தை மூடி எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்களே என்று கலங்கினார். இஸ்ரவேலரை, பிலேயாம் சபித்துவிட்டால் அவர்களை மேற்கொள்வது எளிது என்று எண்ணினார். ஆனால் அன்று இரவே தேவன் பிலேயாமிடத்தில் வந்து, “உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார்?” (எண். 22:9) என்று கேட்டு, நீ அவர்களோடே போகவோ சபிக்கவோ வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.

அப்பொழுது பாலாக் என்ற இராஜா மறுபடியும் அவரிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பி, “உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்” என்று ஆசை காட்டினான்.

பிலேயாம் அந்த இராஜாவின் வெகுமதிகளினால் மிகவும் அதிகமாய் சோதிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கர்த்தரிடத்தில் விசாரித்துக்கொண்டிருந்தபடியால், கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார். சாத்தான் சோதிக்க வரும்போது ஒரு சோதனையோடு நின்றுவிடமாட்டான். உலகம், மாமிசம் என்று அடுத்தடுத்து சோதிப்பான்.

இயேசுவை சோதிக்கும்படி சாத்தான் உயர்ந்த மலையின்மேல் அவரை நிறுத்தி, “நீர் என்னைப் பணிந்துகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்றான். மட்டுமல்ல, மரணபரியந்தமும் அவரை சாத்தான் சோதித்தான். சிலுவையை சந்திக்கும்முன் அவர், “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” (யோவா. 14:30) என்று சொன்னார்.

சிலுவையில் அவர் தொங்கிக்கொண்டிருக்கும்போதுகூட, சாத்தானானவன் ஜனங்களை தூண்டிவிட்டு, “தேவகுமாரனே, நீர் இறங்கி வாரும். மற்றவர்களையெல்லாம் இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ள திராணியில்லை” என்று பரியாசம்பண்ணும்படிச் செய்தான்.

தேவபிள்ளைகளே, கடைசி மூச்சு இருக்கிற வரையிலும் உங்களுக்கு சோதனைகள் இருக்கத்தான் செய்யும். “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேது. 5:8). அப்படி அவன் கொண்டுவரும் சோதனைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்ளுகிறீர்கள் என்பதைத்தான் பரலோகம் ஆவலுடன் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது. சோதனையில் விழுந்துவிட்டால் அதுபோல வேதனையானதும் கொடுமையானதும் வேறேதுவுமில்லை. நீங்கள் இயேசுவின் நாமத்திலே சோதனைகளை எதிர்கொண்டு ஜெயம் பெறுங்கள்.

நினைவிற்கு:- “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக். 1:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.