No products in the cart.
ஆகஸ்ட் 13 – தகுதியாகும்படி..!
“எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும் அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலி. 3:10,11).
கிறிஸ்துவினுடைய வருகையிலே காணப்பட தகுதியாகவேண்டும் என்பதிலும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க தகுதியாகவேண்டும் என்பதிலும், அப். பவுலுக்கு இருந்த உள்ளத்துடிப்பை இந்த வசனத்தில் காணலாம். “எப்படியாயினும்” என்கிற வார்த்தையையும்கூட சேர்த்து, “எப்படியாயினும் நான் தகுதிப்பட வேண்டுமே” என்று அவர் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
சில மாணவர்கள் பரீட்சையில் வெற்றிபெறுவதற்காக எவ்வளவோ முயற்சி எடுப்பார்கள். எப்படியாது தேர்ச்சி பெற்றுவிடவேண்டும் என்று சொல்லுவார்கள். அல்லது மேல்படிப்புக்கு கல்லூரியில் விண்ணப்பிக்கும்போது எப்படியாவது கல்லூரியில் இடம் கிடைத்துவிடவேண்டுமே என்பார்கள். அதுபோலவே வியாபாரிகள் எப்படியாவது தங்களுடைய சரக்கை விற்றுவிட தீர்மானிப்பார்கள்.
“எப்படியாவது” என்பதை நிறைவேற்ற சிலர் குறுக்கு வழியை கையாளுவதுமுண்டு. சிலர் கமிஷன் என்ற பெயரில் பணத்தை வாரி இறைப்பதுண்டு. ஆனாலும் அப். பவுல் எந்த குறுக்கு வழியையும் தேடவில்லை. எப்படியாவது தகுதியாகும்படிக்கு தம்முடைய உபவாசத்தை அதிகப்படுத்தியிருந்திருப்பார். அல்லது ஜெபஜீவியத்தையும், பரிசுத்தத்தையும் அதிகப்படுத்தியிருந்திருப்பார். அவருடைய கண்கள் எப்படியாவது மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்கு தகுதியாக வேண்டும் என்பதிலேயே நோக்கமாய் இருந்தது. பதினான்கு நிருபங்களை எழுதிய பிறகும்கூட அப். பவுல் இன்னும் தான் முழுமையாய் தகுதியாகவில்லை என்பதை உணருவதைப் பாருங்கள்.
மூன்றாம் வானம்வரை அவர் எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மைதான். அவர் தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனாய் இருந்ததும் உண்மைதான். அவர் பல நாடுகளில் சுற்றித்திரிந்து பல சபைகளை நிறுவினதும் உண்மைதான். அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குரிய எல்லா தகுதியும் அவருக்கு இருந்ததும் உண்மைதான். அவ்வளவு மேன்மைகளைப் பெற்றவராயிருந்தும், அவர் தன்னைத் தாழ்த்திச் சொல்கிறார்: “எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்படுவதற்குத் தகுதியாகவேண்டும்.
மேலும், அவர் எழுதுகிறார்: “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரி. 9:27). எப்படியாவது தகுதியடைய வேண்டுமே என்ற ஆதங்கம் உங்களுக்குள் இருக்குமேயானால் உங்கள் உள்ளம் பரிசுத்தத்தை வாஞ்சித்துக் கதறும். உலக ஆசை இச்சைகளை வெறுத்து முன்னோக்கி ஓடுவீர்கள்.
இது ஒரு பந்தயம் என்பதை மறந்துபோகாதீர்கள். ஒவ்வொருநாளும் உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்து, சீர்ப்படுத்தி, பரிசுத்தப் பாதையில் ஓடாதிருந்தால் உங்களுடைய ஜீவ கிரீடத்தை வேறு ஒருவன் எடுத்துக்கொள்ளக்கூடும். வேதம் சொல்லுகிறது, “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” (1 கொரி. 9:25).
நினைவிற்கு:- “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு” (வெளி. 3:11).