Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 13 – எழுந்திரு!

“அவர்கள் அந்த குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு …. என்றார்கள்” (மாற். 10:49).

வழியோரமாக அமர்ந்திருக்கும் பர்திமேயு, முதலாவது எழுந்திருக்கவேண்டும். சோம்பேறியாய் இருக்கிற நிலைமையிலிருந்து எழுந்திருக்கவேண்டும். புழுதியான தரை, பிச்சைக்கார நிலைமையிலிருந்து எழுந்திருக்கவேண்டும். குருட்டுத் தன்மையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.

நம்மையும்கூட ஆண்டவர், ‘என் பிள்ளையே, சோர்வான நிலைமையிலிருந்து தூசியை உதறிவிட்டு எழுந்திரு, கழுகைப்போல உன்னதங்களுக்கு செட்டைகளை அடித்து பறக்க எழுந்திரு. உனக்கென்று வைத்திருக்கிற வரங்களையும், வல்லமையையும், பெற்றுக்கொள்ள எழுந்திரு’ என்கிறார்.

கெட்ட குமாரனுக்குப் புத்தி தெளிந்தபோது அவன், “நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான்” (லூக். 15:18,19). பன்றிகளின் இடத்தைவிட்டு அவன் எழுந்திருக்கவேண்டியதிருந்தது. தன்னண்டை வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளாத மனதுருக்கமுள்ள கிறிஸ்துவண்டை எழுந்து வரவேண்டியதிருந்தது.

கர்த்தர், தான் இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்த மனுஷகுமாரன். பாவத்தின் அகோரத்தினால் வந்த வேதனைகளையும், சாபங்களையும், நோய்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறீர்களா? சோர்ந்துபோகாதிருங்கள். இயேசு இருகரம் நீட்டி, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவா. 6:37) என்று அன்போடு உங்களை அழைக்கிறார்.

ஆவிக்குரிய வாழ்க்கையிலே தூங்கி வழிகிறவர்களையும் கர்த்தர் எழுந்திரு என்று அழைக்கிறார். வேதம் சொல்லுகிறது, “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” (எபே. 5:14). தூங்கிவிழுவதினாலே சிம்சோன் தன் பெலனை இழந்தாரல்லவா? தூங்கி விழுந்த ஐத்திகு ஜீவன்போன நிலைமைக்கு வந்தாரல்லவா? கப்பலின் அடித்தட்டில் தூங்கிக்கொண்டிருந்த யோனா தீர்க்கதரிசியை புறஜாதியார் தட்டி எழுப்பி ஜெபிக்கச் சொன்னார்களல்லவா? தூங்கிவிழுந்த எலியா தீர்க்கதரிசியை தேவதூதன் தட்டியெழுப்பி, போஜனம்பண்ணி பெலன்கொள்ளச்செய்தாரல்லவா?

நீங்கள் போகவேண்டிய தூரம் வெகு தூரம். கர்த்தர் உங்களைக்கொண்டு அநேக பெரிய காரியங்களைச் செய்யவிருக்கிறார். சோர்வின் தூக்கத்தைவிட்டு எழுந்திருங்கள். கர்த்தர் தம்முடைய மணவாட்டியையும்கூட, “எழுந்திரு” என்று சொல்லுகிறார். “என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா. இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா” என்று அழைக்கிறார் (உன். 2:10,11,13).

தேவபிள்ளைகளே, வருகையின் அடையாளங்களெல்லாம் எங்கும் காணப்படுகின்றன. தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டன. எழுந்து மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவுக்கு எதிர்கொண்டு போவோமா?

நினைவிற்கு:- “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.