No products in the cart.
ஆகஸ்ட் 02 – அதிகாலை ஜெபம்!
“அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்” (சங். 143:8). “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்” (சங். 143:10).
அதிகாலையிலே கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருப்பது அவருக்குப் பிரியமானதாகும். தாவீது தன் தேவனைப் பிரியப்படுத்தவேண்டுமென்ற வாஞ்சைகொண்டதினாலே தினந்தோறும் அதிகாலையிலே எழும்பி தேவ சமுகத்துக்கு வந்து, “ஆண்டவரே, உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று ஜெபித்தார்.
தேவனைப் பிரியப்படுத்த நம் சுயபெலத்தினாலோ, சுயநீதியினாலோ, சுயமுயற்சியினாலோ முடியாது. ஒவ்வொரு நாளும் அதிகாலைவேளையில் தேவ சமுகத்துக்கு எழும்பி வந்து, “ஆண்டவரே எனக்குப் போதியும்” என்று கேட்கிறவர்களே தேவனைப் பிரியப்படுத்துவார்கள். ஆம், கர்த்தர் நமக்குப் போதிப்பார் என்றால் நிச்சயமாகவே அவருடைய வழிகளில் நாம் நடந்து அவருடைய பிரியத்தை பெற்றுக்கொள்ளுவோம்.
கர்த்தர் நமக்குப் போதிக்க அதிகாலை நேரம் மிகுந்த இன்பமானதும், இனிமையானதுமான நேரமாகும். தேவன் நம்முடன் பேசுவதும், நாம் அவருடன் உறவாடுவதும், அந்த நாள் முழுவதிலும் கர்த்தருடைய சித்தம் என்ன என்பதை தெரிந்துகொள்வதும், அவரால் போதிக்கப்படுவதும் எத்தனை மகிமையான அனுபவங்கள்!
வேதம் சொல்லுகிறது, “பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்” (ஆதி. 3:8). தேவனோடு உறவாட அதிகாலைவேளையில்தான் நம் இருதயம் அமைதலாகவும், சமாதானமாகவும் இருக்கும். அந்த வேளையில் தேவ சத்தத்தை நாம் தெளிவாகக் கேட்டு மகிழமுடியும். அதன் பின்பு பகல் நேரங்களில் உலக அலுவல்கள், உலக பாரங்கள் நம்மை நெருக்கிப்போடக்கூடும். ஆகவே கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய கர்த்தர் நமக்குப் போதிக்கும்படி அதிகாலை நேரத்தை ஒதுக்கவேண்டும்.
தாவீது அதிகாலை எழுந்ததினால், “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” (சங். 17:15) என்று எழுதுகிறார். தாவீது மட்டுமல்ல, எல்லா தேவனுடைய பிரிசுத்தவான்களும் அதிகாலை எழும்பி, தேவனோடு உறவாடி, அவருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்டு பழக்கப்பட்டிருந்தார்கள். “ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து” என்று ஆதி. 22:3-லே வாசிக்கிறோம். யோபு அதிகாலையிலே எழுந்து தேவசமுகத்தில் சர்வாங்க தகனபலிகளை செலுத்தியதையும் வேதத்தில் பார்க்கிறோம் (யோபு 1:5).
இயேசு ஜெபித்ததைக்குறித்து வேதம் சொல்லுவதைப் பாருங்கள். “அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.” (மாற். 1:35).
தேவபிள்ளைகளே, அதிகாலையில் எழுந்து ஜெபிப்பதையும், தியானிப்பதையும், கர்த்தரோடு உறவாடுவதையும் உங்கள் வாழ்க்கையில் அனுபவமாக்கிக்கொள்ளுங்கள். அதிகாலையில் எழும்பி முழு இருதயத்தோடும் சந்தோஷத்தோடும் கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும்போது, துதியில் பிரியப்படுகிற கர்த்தர், உங்களுக்குத் தமது வழியைப் போதிப்பார்.
நினைவிற்கு:- “நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?” (ஏசா. 48:14).