bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

அக்டோபர் 29 – ஞானத்தின் வழிமுறை!

“பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்” (நீதி. 9:8).

காலம் செல்லச்செல்ல மனுஷனுடைய உள்ளம் முரட்டாட்டமாய் மாறுகின்றது. மனிதர்கள் புத்தியையும், ஆலோசனையையும் பெற விரும்புவதில்லை. ‘எனக்கு எல்லாம் தெரியும், யாரும் எனக்கு சொல்லவேண்டியதில்லை. என் எதிர்காலத்தை நானே வகுத்துக்கொள்வேன்’ என்கிறார்கள். பள்ளிக்கூடத்து மாணவர்களை கடிந்துகொள்ள முடியாது. பிரம்பைக்கொண்டு அவர்கள் புத்தியீனத்தை அகற்ற முடியாது. உடனே ஊர் மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள்.

ஒரு கல்லூரிப் பேராசிரியை துக்கத்தோடு சொன்னார், கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே, மாணவர்களுக்குள்ளிருந்த சன்மார்க்கநெறி முற்றிலும் சீர்கெட்டுப்போய்விட்டது. கல்லூரிக்கு வந்த ஒருசில நாட்களுக்குள்ளாகவே ஆணும், பெண்ணுமாக ஜோடி சேர்ந்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம்தான் வகுப்பில் இருப்பார்கள். பிறகு வெளியே புறப்பட்டு விடுவார்கள். கல்லூரி நிர்வாகிகளோ அவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தால்தான் கல்லூரிக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆகவேதான் சாலொமோன் ஞானி சொல்லுகிறார், பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, ஞானமுள்ளவனைக் கடிந்துகொள். அவன் உன்னை நேசிப்பான். பக்தியுள்ள பெற்றோர்களிடம் வளர்ந்த பிள்ளைகள், புத்திமதியையும், ஆலோசனையையும், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுவார்கள். தாவீது இராஜா, தன்னைத் தாழ்த்தி எழுதுகிறார், “நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும், என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை” (சங். 141:5).

அதுபோல நீங்களும், உங்கள் பெற்றோருடைய ஆலோசனைகளுக்கும், வழி நடத்துதல்களுக்கும், உங்களை ஒப்புக்கொடுங்கள். “ஞானமுள்ள மகன், தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ, தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்” (நீதி. 10:1). உண்மையாகவே இளம்வயதிலும், வாலிபப்பிராயத்திலும் என் தகப்பனார் என்னிடம் காட்டிய கண்டிப்புகளும், சொன்ன ஞான அறிவுரைகளும், இன்றும் எனக்கு பயனுள்ளவைகளாய் இருக்கின்றன. என் தகப்பனாரை நினைக்கும்போதெல்லாம், எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது.

ஞானமுள்ள பிள்ளைகள் தன் பெற்றோரைக் கனப்படுத்துகிறார்கள். மேன்மைப்படுத்துகிறார்கள். அதன் மூலம் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” (எபே. 6:2,3).

“நான் குழந்தையாய் இருந்தபோது, என் தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை வளர்த்திருப்பார்களோ? என்னுடைய சுகவீன நேரத்தில் இரவு, பகல் தூங்காமல், கண் விழித்துப் பார்த்திருப்பார்களோ?” என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. திருமணமாகி, பிள்ளைகளைப் பெற்றெடுத்தபிறகுதான், பெற்றோர் எவ்வளவு பாசத்தோடு, தங்களுடைய சுகநலன்களை தியாகம் செய்து, தங்களை வளர்த்திருப்பார்கள் என்பது புரிய வரும். தேவபிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருடைய ஆசீர்வாதத்திற்கு இணையான ஆசீர்வாதம் எதுவுமேயில்லை. ஆகவே, பெற்றோரை நேசித்து, கனம்பண்ணுங்கள்.

நினைவிற்கு:- “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” (நீதி. 27:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.