No products in the cart.
அக்டோபர் 20 – யோசபாத்!
“அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (2 நாளா. 20:3).
இன்றைக்கு நாம் இராஜாவாகிய யோசபாத்தை சந்திக்கப்போகிறோம். இவர் ஆசா என்ற யூதாவின் இராஜாவுக்கு குமாரனாகப் பிறந்தார். யூதாவின் எல்லா இராஜாக்களைப்பார்க்கிலும், இவர் அதிக பயபக்தியோடு, தேவன்பேரில் நம்பிக்கையுள்ளவராய் இருந்தார். இவருடைய காலத்தில் யூதாவுக்கும், இஸ்ரவேலருக்குமிடையே சமாதானம் இருந்தது.
யோசபாத் என்ற வார்த்தைக்கு, கர்த்தரின் தீர்ப்பு, கர்த்தரே நியாயாதிபதி என்பவை அர்த்தங்களாகும். இவர் இராஜாவானவுடன் செய்த முதல் வேலை, அங்குள்ள விக்கிரகங்களையும், மேடைகளையும், தோப்புகளையும் முற்றிலுமாய் அகற்றினார். யூதாவிலே கர்த்தரைப்பற்றி எடுத்து உபதேசிப்பதற்காக, பிரபுக்களையும், ஆசாரியர்களையும் தேசமெங்கும் அனுப்பினார்.
ஒருமுறை இவருக்கு விரோதமாக மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷரும் யுத்தம்பண்ண வந்தார்கள். இந்த செய்தி யோசபாத்தின் உள்ளத்தைக் கலங்கச்செய்தது. அவரிடம் போதுமான ஆயுதங்களும் இல்லை, படைவீரர்களும் இல்லை. ஆகவே, கர்த்தரைத் தேடுவதற்கு ஒருமுகப்பட்டு, யோசபாத் யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.
எல்லா ஜனங்களோடு யோசபாத்தும் நின்று உபவாசித்து, “எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது” (2 நாளா. 20:6) என்று சொல்லி, ஊக்கமான ஒரு ஜெபத்தை செய்தார்.
அந்த ஜெபத்தின் முடிவிலே “எங்கள் தேவனே, …. எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமானக் கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 20:12) என்றார்.
எத்தனை தாழ்மை பாருங்கள்! கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறவர். ஜெபத்திற்குப் பதிலளிக்கிறவர் என்கிற முழு விசுவாசத்தோடு, தங்களுடைய இருதயத்தை ஊற்றி அவர்கள் ஜெபித்தபோது, அந்த ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுக்காமல் இருப்பாரா?
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் ஒரு தீர்க்கதரிசியின்மேல் இறங்கி, “சகல யூதா கோத்திரத்தாரே, …. ராஜவாகிய யோசபாத்தே, கேளுங்கள், நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது” (2 நாளா. 20:15) என்று பேசினார். இஸ்ரவேலர் பாடி துதிசெய்யத் தொடங்கினபோது, கர்த்தர் அவர்கள் பகைவர்களையே ஒருவருக்கு விரோதமாக ஒருவர் எழும்பப்பண்ணினார். அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
தேவபிள்ளைகளே, நீங்கள் எந்த பணியைத் தொடங்கும்போதும், கர்த்தரிடத்திலே விசாரித்து திட்டமான வழிநடத்துதலைப் பெற்றுச் செயலாற்றுங்கள். குடும்பமாக உபவாசித்து கர்த்தருடைய பாதத்திலே காத்திருங்கள். அதுவே வெற்றியின் வழி.
நினைவிற்கு:- “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:14).
