No products in the cart.
அக்டோபர் 20 – ஞானம் தற்காக்கும்!
“அதை (ஞானத்தை) விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்” (நீதி. 4:6).
“ஞானத்தின் மேல் பிரியமாயிரு, அது உன்னை காத்துக்கொள்ளும்” என்று சாலொமோன் சொல்லுகிறார். அதனுடைய ஆழமான அர்த்தம் ஞானமாகிய கர்த்தரிடத்தில் பிரியமாயிரு என்பதேயாகும். எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரைப் பிரியப்படுத்துவீர்களாக. அவரே ஞானத்தின் ஊற்றானவர். ஞானத்தின் பிறப்பிடமும், ஞானத்தைத் தருகிறவருமான கிறிஸ்துவிடம் வந்து மெய்ஞானத்தால் நிரப்பப்படுங்கள்.
சாலொமோன் தாவீதின் கடைசி மகன். சாலொமோன் என்ற வார்த்தைக்கு சமாதானத்தின் மகன் என்பது அர்த்தமாகும். தாவீது அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்ட போதிலும், நாத்தான் அவனுக்கு “யெதிதியா” என்று பெயரிட்டார் (2 சாமு. 12:25) அதற்கு “கர்த்தருக்குப் பிரியமானவன்” என்பது அர்த்தமாகும்.
கர்த்தருக்குப் பிரியமானவன் என்று அழைக்கப்பட்ட சாலொமோன், ஞானத்தின் மேல் பிரியமாயிரு என்று எழுதுகிறார் (நீதி. 4:6). “ஞானத்தை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்” என்பதே அவருடைய ஆலோசனை. அநேகருக்கு ஞானம் என்றால் என்ன என்பதும், அறிவு என்றால் என்ன என்பதும் தெரிவதில்லை. அறிவு என்பது புத்தகங்களிலிருந்தும், அறிவாளிகளிடத்திலிருந்தும் பெற்று மூளையில் சேர்த்துக் வைத்துக்கொள்ளுவதாகும். ஆனால் ஞானமோ, பெற்ற அறிவிலிருந்து செயலாற்றும் திறமையைக் குறிக்கிறது.
அறிவானது கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று கற்றுக்கொள்ளுவதால் ஏற்படுகிறது. ஆனால் ஞானமோ, கற்றுக்கொண்டவைகளில் தெளிவடைந்து, தீர்மானத்தோடு படித்தவைகளை செயல்படுத்துகிறதாயிருக்கிறது.
கல்வி கற்பது என்பது வேறு; ஞானத்தில் சிறந்து விளங்குவது என்பது வேறு. ஞானத்தில் சிறந்து விளங்கவேண்டுமென்றால் ஞானத்தின் ஊற்றாகிய கர்த்தர்மேல் பிரியமாய் இருக்கவேண்டும். கர்த்தரை அதிகமாய்த் தேட வேண்டும். அவரைச் சார்ந்துகொள்ளவேண்டும். கர்த்தர் கொடுக்கிற ஞானம் உலகில் உள்ள எல்லா ஞானங்களைப்பார்க்கிலும் மேன்மையானதாகும்.
அறிவு படிப்பினால் வருகிறது. ஆனால் ஞானமோ இறைவனிடத்திலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்படுகிற பெரிய ஈவாகும். நீங்கள் கர்த்தருக்குப் பயப்படும்போதுதான் அந்த ஈவு செயல்பட ஆரம்பிக்கிறது. “கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்” (நீதி. 28:5) என்று வேதம் சொல்லுகிறது.
சாலொமோன் ஞானி சொன்னதை ஏற்கனவே தாவீது ராஜாவும் எழுதி வைத்திருக்கிறார். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்” (சங். 111:10).
தேவபிள்ளைகளே, ஞான வரங்களை அவரிடத்தில் கேளுங்கள். ஒருவரும் எதிர்த்து நிற்கக்கூடாத வாக்கினாலும், வல்லமையினாலும் நிரப்பும்படி ஜெபியுங்கள்.
நினைவிற்கு:- “தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார். பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும் பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்” (பிர. 2:26).