No products in the cart.
அக்டோபர் 08 – அறியப்படாத யோபின் மனைவி!
“நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்” (யோபு 2:9).
அறியப்படாதவர்களின் வரிசையில் யோபுவின் மனைவியும் வருகிறாள். அவளுடைய பெயர் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவள் பேசிய வார்த்தைகள் கொடூரமாய் இருந்தன. துயரத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும்கூட உடன்நிற்பவள்தான் மனைவி. அவள் கணவனைத் தாங்குவதற்காக கர்த்தரால் கொடுக்கப்பட்டவள்.
ஆனால் கணவனை வார்த்தைகளால் தாக்குவது எத்தனை வேதனையான காரியம்! சோதனை காலங்களில் உறுதுணையாய் நின்று கணவனுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, கீழே தள்ளி காலால் மிதிப்பதுபோல அவளது பேச்சு இருந்தது.
மகிழ்ச்சியான காலங்களில், யோபுவுடைய குடும்பத்தில் ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐநூறு ஏர்மாடுகள், ஐநூறு கழுதைகள், இன்னும் திரளான பணிவிடைக்காரர்கள் இருந்தார்கள். யோபுவின் குணாதிசயம் விசேஷமாயிருந்தது. கர்த்தர்தாமே அதைக் குறித்து சாட்சி கொடுத்து, “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்” (யோபு 1:8).
பாடுகளின் நேரத்திலே ஒரு மனிதனின் உண்மையான மனநிலைமை வெளிப்படுகிறது. பொன்னானது, அக்கினி ஜுவாலைக்குள்ளாகப் போகும்போது பசும்பொன்னாக பிரகாசிக்கிறது. ஆனால் போலியான கவரிங் பொன்னானது, கருகி சாம்பலாகிவிடுகிறது. போராட்டத்தின் பாதையிலே யோபு பொன்னாக விளங்கினார்.
ஆனால் யோபுவின் மனைவியோ, தன் உண்மை சுபாவத்தைக் காண்பித்தாள். அக்கினியண்டை ஒரு மெழுகைக் கொண்டுவந்தால், அது ஒன்றுமில்லாமல் உருகிப்போகும். ஆனால் களிமண் அப்படிச் செய்யப்படும்போது இறுகி உறுதியாகிறது. யோபுவின் மனைவியால் அந்த சோதனைகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கர்த்தரைத் தூஷித்தாள். கணவனையும், தேவனைத் தூஷித்து ஜீவனை விடச்சொன்னாள். “உமக்கு ஒரு முழம் கயிறு இல்லையா?” என்று கேட்பதுபோல அவளது வார்த்தைகள் இருந்தன.
ஆனால் யோபுவின் நிலை என்ன? யோபுவுக்கோ யோபுவின் மனைவியைப் பார்க்கிலும் அதிகமான பாடுகள். சரீரத்திலே கொடிய பருக்கள், புண்கள் ஆகியவற்றுடன் நித்திரையில்லாதபடி உள்ளத்திலே இரவும் பகலும் இனம் புரியாத கலக்கமும், பயமும் அவரை வாட்டின.
ஆனால் யோபு தமது உத்தமத்தை விட்டுப் பின்வாங்கவில்லை. “கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான்” (யோபு 1:21). தன் உள்ளத்தைப் புண்படுத்திய மனைவியிடத்திலும்கூட, சமாதானமாகவே பேசினார். “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்” (யோபு 2:10).
எவ்வளவோ இரத்த சாட்சிகள் தங்கள் விசுவாசத்திலும், கர்த்தர்பேரில் வைத்த அன்பிலும் கடைசிவரை உண்மையாயிருந்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். துயர நேரங்களில் நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள், செயல்படுகிறீர்கள் என்பதைப் பரலோகம் கவனித்துக்கொண்டேயிருக்கிறது. தேவனுக்கு விரோதமாய் பேசுவதற்கு சாத்தான் உங்களைத் தூண்டிவிட இடங்கொடுக்காதிருங்கள்.
தேவபிள்ளைகளே, எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் தேவனைத் தூஷிக்காதிருங்கள். மறுதலிக்காதிருங்கள். யோபுவின் நீடிய பொறுமை உங்களிலும் காணப்படட்டும்.
நினைவிற்கு:- “தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; …. பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்” (லேவி. 24:14).