No products in the cart.
Sep 27 – சிங்கங்கள்!
“தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?” (தானி. 6:20).
அன்று உலகம் தானியேலைப் பார்த்து, “உன் தேவன் எப்படிப்பட்டவர்? சிங்கங்களின் வாய்க்கு தப்புவிக்க வல்லவராய் இருந்தாரா?” என்று கேட்டதுபோல இன்றைய உலகத்தாரும் உங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?
வேதத்திலே “சிங்கம்” என்ற வார்த்தை நான்கு பேரைக் குறிக்கிறதாக இருக்கிறது. முதலாவது சிங்கம் என்பது சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. வேதம் சொல்லுகிறது, “ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8).
துன்மார்க்கர்களும் சிங்கத்துக்கு ஒப்புமையாக சொல்லப்பட்டிருக்கிறார்கள். “சிங்கத்தைப் போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்” (யோபு 10:16) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
அதே நேரம் நீதிமான்களையும் கர்த்தர் சிங்கத்துக்கு ஒப்பிட்டிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கிறார்கள்” (நீதி. 28:1). நம் அருமை ஆண்டவரும்கூட சிங்கத்துக்கு ஒப்பாய் இருக்கிறார். “யூதா கோத்திரத்துச் சிங்கம்” என்று அவர் அழைக்கப்படுகிறார் (வெளி. 5:5).
இன்றைக்கு பலவிதமான பொல்லாத, தீய மனுஷர்கள் உங்களுக்கு விரோதமாய் சிங்கங்களைப்போல நிற்கலாம். உங்களுடைய வீட்டிலும், அலுவலகத்திலும் நீங்கள் தனிமையில் நிற்கும்போது ஐயோ, சிங்கங்களின் மத்தியில் நிற்பதுபோல நான் நிற்கிறேனே என்று கலங்கலாம். பல கொடிய சிங்கங்கள் உங்கள்மேல் சீறிப் பாய்ந்து உங்களை பட்சித்துப்போட வகைதேடலாம். சரி, கர்த்தர் உங்களை எப்படி சிங்கங்களின் வாய்க்குத் தப்புவிக்கிறார்?
முதலாவதாக, நீங்கள் கர்த்தரை இடைவிடாமல் ஆராதிக்கும்போது அந்த ஆராதனை தேவ பிரசன்னத்தைக் கொண்டுவந்து சிங்கங்களின் வாய்களை கட்டிப்போடுகிறது (தானி. 6:20).
இரண்டாவதாக, சிங்கங்கள் உங்களுக்கு விரோதமாய்ச் சீறும்போது, தேவன் தன்னுடைய தூதரை அனுப்பி அவைகளின் வாயைக் கட்டிப்போடுகிறார். ஆம், தூதர்கள் மூலம் சிங்கங்களின் வாயைக் கட்டுகிறார் (தானி. 6:22).
மூன்றாவதாக, சர்வ வல்லமையுள்ள தேவன் யூதா கோத்திரத்துச் சிங்கமாய் வரும்போது (வெளி. 5:5) சாதாரண சிங்கங்களின் வாய்கள் கட்டப்படுகின்றன. நான்காவதாக, உங்களுடைய விசுவாசம் சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டுவிடுகிறது. வேதம் சொல்லுகிறது, “விசுவாசத்தினாலே…. சிங்கங்களின் வாயை அடைத்தார்கள்” (எபிரெயர் 11:33).
தேவபிள்ளைகளே, சிங்கங்களைக்கண்டு கவலைப்படாதேயுங்கள். தானியேலைப்போல விசுவாசத்தோடு சிங்கங்கள் என்னை சேதப்படுத்தாதபடி தேவன் தன்னுடைய தூதனை அனுப்பி அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார் என்று தைரியமாய் முழங்குங்கள்.
நினைவிற்கு:- “சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்” (சங். 91:13).