Appam, Appam - Tamil

Sep 11 – மான் கால்கள்!

“அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி,….” (ஆபகூக் 3:19).

மான்களின் கால்கள் விசேஷமானவை. அவை உறுதியானவை. கன்மலைகளில் ஏறக்கூடியவை. மான்கள் மிகவும் வேகமாக ஓடக்கூடியவை என்று வேதம் தெரிவிக்கின்றது (2 சாமு. 2:18). மான்கள் வேகமாக ஓடுவதைப்போலவே நாமும் பண ஆசையைவிட்டு ஓடவேண்டும் (1 தீமோ. 6:9-11), பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடவேண்டும் (2 தீமோ. 2:22), இயேசுவை நோக்கி ஓடவேண்டும் (எபி. 12:1).

கர்த்தர் உங்களுடைய ஆவிக்குரிய கால்களை மான்கால்களைப் போலாக்கி, உன்னதங்களிலேயும், உயர்ந்த ஸ்தலங்களிலேயும் நடக்கப்பண்ணுகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையானது ஒரு ஓட்டப்பந்தயத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. வேதம் சொல்கிறது, “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” (1 கொரி. 9:24).

இந்த ஆவிக்குரிய ஓட்டப்பந்தயத்தில் வெற்றிகரமாக ஓடுகிறதற்கு தனக்கு மான்களின் கால்கள் அவசியம் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் உணர்ந்திருந்தார். ஆகவே “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று குறிப்பிட்டார் (பிலி. 3:13,14).

மான்களைப்போல நீங்களும் படிப்படியாய் உன்னத ஸ்தலங்களுக்கு ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். ஆவிக்குரிய மேன்மையான அனுபவங்கள் வழியாக உயர்ந்துகொண்டே இருக்கவேண்டும். பரம எருசலேமுக்கு ஏறிச்செல்லுவதற்கு ஆன்மீக கால்களில் அதிகமான பெலன் தேவை.

மான்களைப்போல கால்களையுடைய காலேப் தனது எண்பத்தைந்தாவது வயதிலே, “இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; …ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்” என்று கேட்டார் (யோசுவா 14:10-12). மோசே நூற்றிருபது வயதிலும் பெலனுள்ள கால்களைக் கொண்டவராகவே இருந்தார். அந்த முதிய வயதிலும் அவருடைய கண்கள் மங்கவுமில்லை; அவருடைய பெலன் குறைவுபடவுமில்லை.

மோசேக்கு மிகவும் வயதான பிறகும்கூட அவருடைய கால்கள் மான்கால்களைப் போலவே இருந்தன. அவர் அந்த வயதிலேயும் நேபோ மலையில் இருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்க இருந்த கானானை நோக்கிப்பார்த்தார் (உபா. 34:1).

தேவபிள்ளைகளே, உங்களுடைய கால்கள் எப்படிப்பட்டதாய் இருக்கின்றன? உன்னதங்களுக்கு ஏறிச் செல்ல உற்சாகமாய் இருக்கின்றனவா? அல்லது தள்ளாடுகின்றனவா? ஊழியத்தில் உன்னதமான உயர் ஸ்தலங்கள் உங்களுக்காகவே வைக்கப்பட்டிருக்கின்றன. வேதம் சொல்லுகிறது, “இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும். உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும்” (உபா. 33:25).

நினைவிற்கு:- “உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசா.52:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.