AppamAppam - Tamil

ஜூலை 7 – ராஜாவின் முகம்!

“அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்” (2 சாமு. 14:28).

தாவீதும், தாவீதின் மகனாகிய அப்சலோமும் எருசலேமில்தான் குடியிருந்தார்கள். ஆனால் அந்த அப்சலோம் இரண்டு வருஷமாய் ராஜாவின் முகத்தைக் காணாமலேயே இருந்தான் என்று வேதம் சொல்லுகிறது. இது எத்தனை வேதனையான காரியம்!

ஒருவேளை நீங்கள் சபையாகிய எருசலேமிலே குடியிருக்கலாம். விசுவாசிகளோடு ஆராதனையில் கலந்து கொள்ளலாம். வேதம் வாசிக்கிறேன், ஜெபம் பண்ணுகிறேன் என்று சொல்லலாம். ஆனால் உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப் பிரியப்படுகிறேன். ‘நீங்கள் ராஜாவின் முகத்தைத் தரிசித்திருக்கிறீர்களா? ராஜாதி ராஜாவின் கண்களை உங்கள் கண்கள் கண்டதா? அவர் உங்களோடு பேசினாரா?’

இன்று விசுவாசிகள் என்று பெயர் பெற்றவர்கள் ஏராளமானபேர் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கும், கர்த்தருக்கும் எந்தத் தொடர்புமில்லாமல் இருக்கிறது. அவரோடுகூட தனிப்பட்ட ஐக்கியம் வைத்துக்கொள்ளாமல், கடமைக்காக ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எருசலேம் என்பது மகாராஜாவின் நகரம். அது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஸ்தலம். அங்கே மகிமையான ஆலயமுமுண்டு. ஆலயத்தில் பணிவிடை செய்கிற லேவியர் ஆசாரியருமுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக ராஜா அங்கே அரசாளுகிறார்.

இன்னொரு பகுதியை உங்களுக்கு சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டவர்தான் இயேசு கிறிஸ்து. ஆனால் இயேசு எப்போதும் பிதாவின் முகத்தைத் தரிசித்துக்கொண்டே இருந்தார். அதிகாலையில் வனாந்தரமான இடத்திற்குச் சென்று பிதாவின் முகத்தைத் தரிசித்தார். இரவில் கெத்செமனே தோட்டத்திற்குச் சென்று பிதாவின் முகத்தை தரிசித்தார். சிலுவையில் அறையப்பட்டபோது இமைப்பொழுது பிதாவாகிய தேவன் தம்முடைய முகத்தை மறைத்துக் கொண்டதை கிறிஸ்துவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (சங். 22:1) என்று சொல்லி கதறினார்.

ஒரு கிறிஸ்தவனின் உண்மையான மேன்மை என்ன? தேவனைத் தரிசிப்பதே. தேவனைத் தரிசித்ததினால் மோசேயின் முகம் சூரியனைப்போல பிரகாசித்தது. கர்த்தர் உங்களுக்கும் தம்முடைய முகத்தை பிரகாசிக்கச் செய்கிறார். வேதம் சொல்லுகிறது, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத். 5:8).

அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமல் இருந்ததின் காரணம் என்ன? அப்சலோமின் பாவம்தான். அது அவனுடைய மனச்சாட்சியை குத்தியது. ராஜாவின் சந்நிதிக்கு எப்படி வருவது என்று தெரியாமல் இரண்டு ஆண்டுகளாய் ராஜாவைத் தரிசியாமலேயே எருசலேமில் குடியிருந்தார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் தேவனுடைய முகத்தைத் தரிசித்து அவரோடு பழகி ஐக்கியம் கொள்ளுவதற்கு உங்கள் எல்லா பாவங்களையும் அறிக்கையிடுங்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்களைச் சுத்திகரிக்க வல்லமையுள்ளது. பாவம் உங்களைவிட்டு விலகும்போது கர்த்தருடைய முகத்தை நீங்கள் தரிசிப்பீர்கள். தடுப்பு சுவர் நீங்கும்போது தேவனுடைய வெளிச்சம் உங்கள்மேல் உதிக்கும்.

நினைவிற்கு:- “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுவில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை” (ஏசா 59:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.